நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வருகிறது. விளையாடிய 9 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் விளைவாக அந்த அணி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், நாளை (ஏப்ரல் 30) தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இப்போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தால், அதிகாரப்பூர்வமாக தொடரை விட்டு வெளியேறிவிடும். வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்றை நினைத்து பார்க்கமுடியும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஒருமுறை கூட புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் முடித்தது கிடையாது. பிளே ஆஃப் செல்லவில்லை என்றாலும் கடைசி இடத்தில் முடிக்கக்கூடாது என்றால், சென்னை அணி மீதமுள்ள 5 போட்டிகளில் குறைந்தது 3 போட்டிகளிலாவது வென்றாக வேண்டும். எனவே கடைசி இடத்தையாவது தவிர்க்க வேண்டும் என்பதுதான் அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேபோல் சென்னை சேப்பாக்கத்தில் பஞ்சாப் அணி கடந்த சீசன்களாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இந்த முறை ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் அந்த அணி நல்ல பலத்துடன் இருப்பதால், சென்னை அணி அந்த அணியை வெல்லுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில், நாளை நடக்கும் போட்டியில் சென்னை அணியின் பிளேயிங் 11ல் 22 வயது இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த போட்டிகளில் ஷேக் ரஷித், ஆயுஷ் மாத்ரே போன்றோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில், இளம் வீரர் வன்ஷ் பேடிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவர் மிடில் ஆர்டரில் இறக்கப்படலாம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் அதிரடியான ஆட்டத்தை கொண்டவர். முன்னதாக டெல்லி பிரீமியர் லீக் தொடரில் அதிரடியாக விளையாடி தனது திறமையை அவர் வெளிப்படுத்தி உள்ளார். எனவே இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க: ‘ரொம்ப லக்கி’ சூர்யவன்ஷி குறித்த கில் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு – பின்னணி என்ன?
மேலும் படிங்க: CSK தோல்வி உறுதி… பஞ்சாப் அணியின் இந்த 3 வீரர்களை சமாளிக்காவிட்டால்…!