தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), 2025-26 கல்வியாண்டிற்கான 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை திருத்தியமைத்து, டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர்கள் பற்றிய அத்தியாயங்களை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கு பதிலாக, மௌரியர்கள், சுங்கர்கள் மற்றும் சாதவாகனர்கள் போன்ற பண்டைய இந்திய வம்சாவழிகள், மத மரபுகள், கலாச்சார மரபுகள் மற்றும் புனித தலங்கள் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
முந்தைய பாடதிட்டங்கள், இடைக்கால இந்தியாவின் வரலாற்றை இஸ்லாமிய மன்னர்கள் மற்றும் முகலாய நிர்வாகத்தின் பார்வையில் அறிமுகப்படுத்தியது. இதிலிருந்து புதிய பாடத்திட்டத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?
7ம் வகுப்பு பாடத்திட்டம், ‘இந்தியாவும் உலகமும்’, ‘கடந்த கால திரைச்சீலைகள்’, ‘நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவு மரபுகள்’, ஆட்சி மற்றும் ஜனநாயகம், ‘நம்மைச் சுற்றியுள்ள பொருளாதார வாழ்க்கை’ ஆகிய 5 கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது.
புதிய பாடத்திட்டத்தின் படி, இந்தியாவின் வரலாறு பாரம்பரிய யுகத்தில் (பொ.ஆ 6ம் நூற்றாண்டு) முடிகிறது. சாதவாகனர்கள், அசோகர் மௌரிய பேரரசில் கவனம் செலுத்துகிறது. சேர, சோழ, பாண்டியர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.
‘பூமி எவ்வாறு புனிதமாகிறது’ போன்ற புதிய அத்தியாயங்கள் முழுவதும் மத மரபுகள், புனித யாத்திரைத் தளங்களை ஆராய்கின்றன, கும்பமேளா போன்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
ஒருதலைபட்சமான மாற்றங்கள்
இந்தியாவின் கடந்தகாலம் பற்றிய பாடங்களை கடந்த சில வருடங்களில் NCERT பலமுறை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரான தொற்று காலத்தில் ஒன்றின்மேல் ஒன்று பொருந்திய, பொருத்தனற்ற உள்ளடக்கங்களை நீக்குக்வதாக இந்த செயல்முறை தொடங்கப்பட்டது. ஆனால் இதில் ஒருதலைபட்சமாக முகலாயர்கள், டெல்லி சுல்தான்கள் பற்றிய பாடங்கள் முழுவதும் நீக்கப்பட்டுள்ளன.

2023-ம் ஆண்டில் நவீன வரலாற்றுப் பகுதிகள் மாற்றப்பட்டன. பாபர் மசூதி இடிப்பு, 1975 ஆம் ஆண்டு அவசரநிலை மற்றும் 2002 குஜராத் கலவரம் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டன அல்லது திருத்தி எழுதப்பட்டன.
தலித் இயக்கங்கள், நக்சலைட் கிளர்ச்சி மற்றும் வகுப்புவாத வன்முறை பற்றிய பாடங்கள் குறைக்கப்பட்டன.
காந்தி மற்றும் காங்கிரஸ் பற்றிய பார்வையில் மாற்றம்
2022ம் ஆண்டு காந்தி மற்றும் காங்கிரஸில் அரசியல் பக்கங்கள் திருத்தப்பட்டன.
குறிப்பாக காந்தியின் தீவிர இந்துத்துவ எதிர்ப்பு பற்றியப் பக்கங்களும் அவரது அரசியல் மரபு மற்றும் கோட்சேவின் சித்தாந்த தொடர்பு, படுகொலை விவரங்கள், பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்ட வகுப்புவாத விளைவுகள் போன்ற பாடங்கள் 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் குறைக்கப்பட்டுள்ளன.
1989-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி, மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் மற்றும் 1991 இல் பொருளாதார தாராளமயமாக்கல் பற்றிய குறிப்புகள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.

என்.சி.ஆர்.டி மட்டுமல்லாமல் பல மாநில பாடத்திட்டங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மகாராஷ்டிராவில் முகலாய வரலாறு, மேற்கத்திய வரலாறு பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு சிவாஜி மன்னரை சுற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பிரஞ்சு புரட்சி, அமெரிக்க விடுதலைப் போர் பற்றிய பாடங்கள் வெறும் வார்த்தைகளாக மட்டுமே இடம்பெற்றன.
பாட புத்தகங்கள் – கதையாடல்களை மாற்றும் போர்க்களம்?
இந்தியாவின் வரலாறு எப்போதும் சிக்கலானதாகவே இருந்திருக்கிறது. ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட பல கதையாடல்களை தொகுத்து வரலாற்று புத்தகங்களாக வழங்கும் பணி கடுமையானது.
ஆனால் பள்ளிக் கல்வியை சித்தாங்களை புகுத்தும், அல்லது எதிர் சித்தாங்களை பலவீனப்படுத்தும் கருவியாக பயன்படுத்தும் போக்கு வரலாற்றாசிரியர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அரசியல் நிறுவனங்கள், கலை, கட்டடக்கலை மற்றும் கலாச்சாரத்தை வடிவமைத்த முகலாயர், டெல்லி சுல்தான்கள் ஆட்சியை மறைப்பது வரலாறு பற்றிய புரிதலை ஏற்படுத்துவதிலிருந்து மாணவர்களை தள்ளிவைக்கு போக்கு என்கின்றனர்.