லாகூர்,
பாகிஸ்தானில் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருவரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாகூரில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவில் உள்ள மியான் சன்னு, கனேவல் பகுதியில் , வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் சிலர் நடமாடுவது தெரியவந்தது.
இதையடுத்து, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் பிடிபட்டனர். பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு கையெறி குண்டுகள், பிஸ்ட்ல்கள், வெடி மருந்துகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் கொடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தெஹ்ரீக் இ தலீபான் உள்பட பயங்கரவாத இயக்கங்களுடனான பாகிஸ்தான் அரசின் அமைதி பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்தது. அதில் இருந்தே பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன.