சென்னை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்ததால் ஜனவரியில் நடைபெற இருந்த புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி 45-வது புத்தக கண்காட்சி வருகிற 16-ந்தேதி முதல் மார்ச் 6-ந்தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் நடக்கிறது.
500 பதிப்பாளர்களுடன் 800 அரங்குகளில் நடக்கும் புத்தக கண்காட்சியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணி, கைகுழந்தையோடு வருவோர் ஆகியோர் புத்தக கண்காட்சிக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி நுழைவு சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
புத்தக கண்காட்சிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் இணைய தளத்தில் டிக்கெட்டுகளை பெறலாம். அனுமதி கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.