கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 14 நாட்கள் சிறப்பு விடுமுறையை 7 நாட்களாக குறைத்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒடிசா
மாநிலத்தில், முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள்
சிறப்பு விடுமுறை
வழங்கப்பட்டு வந்தது. இதனால் அவர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ள வசதியாக இருந்தது.
இந்நிலையில், ஒடிசா மாநில பொது நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை மாற்றி உள்ளது.
அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 14 நாட்கள் சிறப்பு விடுமுறை, 7 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. 7 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், மருத்துவ சான்றிதழை காண்பித்தால் விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்துத் துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.