புதுடெல்லி: கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு விண்ணப்பம் வந்த 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவில் கூறி யிருப்பதாவது:
கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை எளிதாக்குவதற்கு மாநில சட்ட சேவை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளருடன் ஒருங்கிணைந்து செயல்பட அர்ப் பணிப்புடன் செயல்படக் கூடிய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.
இறந்தவர்களின் பெயர், முகவரி, இறப்பு சான்றிதழ் என முழு விவரத்தையும் ஒரு வாரத்துக் குள் சம்பந்தப்பட்ட சட்டசேவை ஆணையத்துக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கத் தவறினால் இந்த விவகாரம் நீதிமன்றத்தால் மிகவும்தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும்.
இறந்தவர்களின் குடும்பங் களை மாநில சட்ட சேவை ஆணையத்தினர் அணுகி, இழப்பீட் டுக்கு விண்ணப்பம் செய்வதை உறுதி செய்வார்கள். பாதிக்கப் பட்டவர்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாக அவர்கள் செயல்படுவார்கள்.
இழப்பீடு கேட்டு விண்ணப்பிக் காதவர்களை சென்றடைவதே சட்ட சேவை ஆணையத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
இழப்பீடு கோரும் விண்ணப் பங்களை குறைபாடுகளை சுட்டிக் காட்டி நிராகரிக்கக் கூடாது. அந்தக் குறைபாடுகளை சரிசெய்ய அவகாசம் அளிக்க வேண்டும். அதிகபட்சமாக விண்ணப்பம் வந்த 10 நாட்களுக்குள் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பிஹார் உட்பட சில மாநிலங்களில் கரோனா தொற்றால் உயிரிழந் தோரின் எண்ணிக்கை குறை வாகவும், நிவாரண நிதி கேட்டு வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்ததை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக் காட்டி தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை சரியாக அறிந்துதகவல் அளிக்கவும் உத்தர விட்டனர்.