குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதங்களில் பலர் பேசினார்கள். அவற்றில் பிப்ரவரி 2 அன்று ராகுல் காந்தி பேசியவை முக்கியமானவை. ஆனால் ஊடகங்கள் அக்கருத்துக்களை மலிவுபடுத்தி ஏதோ தெருச்சண்டை போடுவது போலச் செய்தி வெளியிடுகின்றன.
சில தேசிய ஊடகங்கள் அவரது முழுமையான பேச்சை வீடியோவாகப் போட்டு பின்னர் ஆளும் கட்சி அழுத்தம் காரணமாக நீக்கிவிட்டன. பாஜக தரப்பு தலைவர்களும் ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு தீவிரமான பதிலையோ விவாதங்களையோ முன்னெடுக்கவில்லை. மாறாக இணைய பாஜகவாசிகள் பப்பு ராகுல் காந்தி என்ற ஹேஷ்டேக்குடன் திருப்தி அடைந்தார்கள்.
தமிழ்நாட்டிலும்கூட அவர் பாஜக ஒரு போதும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று பேசிய கருத்து மட்டும் பிரபலமானது. தமிழகத் தலைவர்களும் அதைச் சுற்றியே கருத்து தெரிவித்து வரவேற்றிருந்தார்கள். ராகுல் தமிழகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. வேறு சில முக்கியமான கருத்துக்களையும் பேசினார். அவையெல்லாம் விவாதப் பொருளாக வரவில்லை என்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
மூன்று முக்கியமான கருத்துக்கள்
New Delhi: Congress MP Rahul Gandhi speaks in the Lok Sabha during ongoing Budget Session, in New Delhi. (SANSAD TV/PTI Photo)
ராகுல் காந்தி பேசியவற்றில் மூன்று முக்கியமான கருத்துக்கள் உள்ளன. ஒன்று அதிகரித்து வரும் வேலையின்மை, இரண்டு சீனா, பாகிஸ்தானோடு ஏற்பட்ட ராஜாங்க ரீதியிலான தோல்வி, மூன்று நாட்டின் அடிப்படை அமைப்புகள் மீது பாஜக அரசு செய்து வரும் தாக்குதல்கள்.
இந்தக் கருத்துக்கள் எல்லாம் ராகுல் காந்தி இப்போது பேசிய புதிய கருத்துக்கள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இவற்றை பேசிவருகிறார். ஆனால் அவை ஆளும் கட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெரும்பாலான ஊடகங்களால் விவாதப் பொருளாகவில்லை. பாஜக தலைவர்களும் அவரைக் கேலி செய்வதோடு விவாதத்திற்கு வருவதில்லை. பிற முக்கியமான காங்கிரஸ் தலைவர்களும் இவற்றைப் பேசுவதில்லை. பிரதமர் மோடி, பாஜக அரசு, அவற்றின் கொள்கைகளைப் பற்றித் தீவிரமாகப் பேசுவதை அவர்கள் தவிர்க்கின்றனர்.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவதாங்களில் ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களும் முக்கியமான கருத்துக்களை பேசியிருக்கின்றனர். அவையும் ஊடகங்களில் விவாதப் பொருளாக வில்லை. இவை இந்தியாவின் ஜனநாயகம் ஆரோக்கிமாக இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. சில மாற்று ஊடகங்கள் மட்டுமே இவற்றினை எடுத்து தீவிரமாக பேசுகின்றன.
வேலையின்மை பிரச்சினை
முதலில் வேலையின்மையை எடுத்துக்கொள்வோம். இதுதான் இந்தியாவின் முக்கியமான சமூக பொருளாதாரப் பிரச்சினை. இதற்குத் தீர்வு இல்லாமல் இந்தியா தவித்து வருகிறது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் வேலையின்மை என்பது கிட்டத்தட்ட ஐந்து சதவீதம். சில வருடங்களுக்கு முன்பு இருந்ததிலிருந்து இரண்டு சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதை பாஜக ஆதரிக்கும் உபி மக்களே பேசுகின்றனர். வல்லுர்களின் கருத்துப்படி வேலையின்மையின் சதவீதம் இன்னும் மிக அதிகம் இருக்கும்.
ராகுல் காந்தி தனது பேச்சில் வேலையின்மை குறித்துச் சில கருத்துக்களை தெரிவித்தார். 2021ஆம் ஆண்டில் மட்டும் மூன்று கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை விகிதத்தை இப்போது இந்தியா சந்தித்துவருகிறது. 2014க்குப் பிறகு உற்பத்தித் துறையில் 46% வேலைகள் குறைந்துள்ளன. முறைசாரா துறைதான் இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை அளித்துவந்தது. அதுவும் நிலை குலைந்து விட்டது. காரணம் ஒன்றிய அரசு கொண்டு வந்த பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, கோவிட் தொற்று காலத்தில் உதவியின்மை.
ராகுலின் கருத்துப்படி அனைத்து அடிப்படைக் கட்டமைப்புத் துறைகளும் அம்பானி, அதானி எனும் இரு பெரு முதலாளிகளுக்கு ஏகபோகமாக அள்ளிக் கொடுக்கப்படுகிறது. இதன் பொருட்டு அதிக வேலை வாய்ப்பை அளித்து வரும் சிறு குறு நடுத்தர தொழில்துறை அழிந்துவருகிறது.
இந்தியாவில் வளர்ந்துவரும் சமத்துவமின்மை
New Delhi: Congress MP Rahul Gandhi speaks in the Lok Sabha during ongoing Budget Session, in New Delhi. (SANSAD TV/PTI Photo)
இதைத்தான் ராகுல் காந்தி அரசாங்கத்தின் மீதான கடும் விமர்சனமாக முன்வைத்தார். ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில் வளர்ந்துவரும் வேலையின்மை பற்றி ஏதுமில்லை என்றார். அதேபோன்று சமத்துவமின்மை அதிகரித்துவருவதையும் சுட்டிக் காட்டினார்.
“இன்று 100 அதீத பணக்காரர்கள் 55 கோடி மக்களின் வருமானத்தைவிட அதிகம் ஈட்டுகிறார்கள். பத்துப் பணக்கார இந்தியர்கள் இந்தியாவின் 40% செல்வத்தை வைத்திருக்கிறார்கள். இந்த நிலை பிரதமர் மோடி பெரும் விளம்பரங்களோடு அறிவித்துவரும் “புதிய இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா” போன்ற வார்த்தை ஜாலங்களோடு முரண்படுகிறது” என்கிறார் ராகுல்.
கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஆபத்து
அடுத்ததாக இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பிற்கு ஏற்பட்ட சேதங்களைப் பேசுகிறார். கூட்டாட்சித் தத்துவமே மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசிற்கும் ஒரு வித சமநிலை பேணும் விதத்தில் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று மோடி அரசு மாநிலங்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்துகிறது. அவை குறித்து விவாதிக்கக்கூட மறுக்கிறது.
இந்தியாவைப் பற்றி இரண்டு சித்திரங்கள் உள்ளன. ஒன்று மாநிலங்களின் ஒன்றியம். இது மாநில, மத்திய அரசுகளுக்கிடையே உரையாடலும் சமரசமும் கொண்ட அணுகுமுறை. இது ஒரு கூட்டாட்சி, மன்னராட்சி அல்ல என்றார் ராகுல்.
பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் வேறு ஒரு சித்திரத்தை வைத்துள்ளன. இந்தியாவை மத்தியில் இருந்துகொண்டு மன்னராட்சி போல ஆள வேண்டும் என்பதே அவற்றின் கொள்கை. மாநிலங்களின் குரல்களை ஒடுக்குகின்றன.
தேர்தல் கமிஷன், நீதித்துறை, பாதுகாப்பு ஏஜென்சிகள் அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசை விமரிசிக்கும் சமூக ஆர்வலர்களை ஒடுக்கத் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது மன்னராட்சியை நினைவுபடுத்துகிறது.
ராஜாங்க உறவில் தோல்வி
மோடியின் ஆட்சியில் ராஜாங்க உறவுகள் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன என்கிறார் ராகுல். அதனால் பாகிஸ்தானும், சீனாவும் முன்பைவிட இந்தியாவிற்கு எதிராக நெருங்கியிருக்கின்றன. இந்தியாவின் முக்கியமான வெளியுறவுக் கொள்கையே பாகிஸ்தானையும் சீனாவையும் பிரித்து வைப்பது. இதுதான் இந்தியாவின் அடிப்படைக் கொள்கை. ஆனால் பாஜக அரசு இதற்கு நேரெதிராக இருநாடுகளையும் இணைத்து வைத்திருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.ஸும், பாஜகவும் இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளோடு விளையாடுகின்றன. அவற்றை பலவீனப்படுத்துகின்றன. நமது மக்களிடையே உறவை பலவீனப்படுத்துகின்றன. நமது மொழிகளிடையே உள்ள இணக்கத்தை சேதமாக்குகின்றன.
இப்போது நமது தேசம் அபாயத்தில் உள்ளது. வெளியுறவிலும் அபாயத்தில் இருக்கிறது. உள்நாட்டிலும் அபாயத்தில் இருக்கிறது.
இவைதான் ஊடகங்களும் பாஜக எதிர்ப்பாளர்களும் பாஜகவினரும் கவனிக்க மறந்த விஷயங்கள்.
ராகுல் தொடர்ந்து சரியான அரசியலைப் பேசுகிறார். அது மக்களைப் பரவலாகச் சென்றடைந்து விவாதங்களை எழுப்பினால் இந்திய அரசியலின் ஆரோக்கியத்துக்கு அது நல்லதாக அமையும்.