மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் தேவேந்திர பட்னாவிஸ். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:
மும்பையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் 3 சதவீத விவாகரத்து ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் போக்குவரத்தில் சிக்கித் தவிப்பதால் நான் தனிப்பட்ட முறையில் சிரமப்பட்டேன்.
நான் தேவேந்திர பட்னாவிசின் மனைவி என்பதை மறந்துவிட்டு, ஒரு பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன். சாலைகள் மற்றும் பள்ளங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் எவ்வாறு நம்மை தொந்தரவு செய்கின்றன என்பதை நான் அனுபவித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவசேனா தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி, 3 சதவீத மும்பைவாசிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக விவாகரத்து செய்கிறார்கள் எனக்கூறிய பெண்ணுக்கு இந்நாளின் சிறந்த லாஜிக் விருது வழங்கப்படுகிறது. பெங்களூரு குடும்பங்கள் இதைப் படிப்பதைத் தவிர்க்கவும். இது உங்கள் திருமணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என டுவிட்டரில் சிரிக்கும் எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…எல்லையில் பதற்றம் நீடிப்பு: ரஷ்யா-உக்ரைன் ராணுவம் தீவிர போர் பயிற்சி