தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் 2005-ம் ஆண்டில் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 ரக கார் வாங்கியிருந்தார். 63 லட்சம் மதிப்புள்ள இந்தக் கார் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. விஜய் இந்த காருக்கான சுங்கவரியை முறையாகச் செலுத்தி அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்திருந்தார். இந்நிலையில் மாநில நுழைவு வரியைத் தமிழக அரசு வசூலிப்பதற்கான அதிகாரம் உள்ளது, எனவே விஜய் இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 காருக்கான மாநில நுழைவு வரியைத் தமிழ்நாடு அரசுக்குச் செலுத்தவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி விஜய் தன் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 காருக்கான நுழைவு வரியான ரூ.7.98 லட்சத்தை மாநில அரசுக்குச் செலுத்தினார்.
Also Read: கோலிவுட் ஸ்பைடர்: `வலிமை’ ரிலீஸ் பிளான் இதுதான்; மணிரத்னத்தின் அடுத்த படம்; ஹீரோவாக ஷங்கரின் மகன்?
அதன்பின், தமிழ்நாடு வணிகவரித்துறை, விஜய் தன் காருக்கான நுழைவுவரியை செலுத்தியதில் கால தாமதம் இருந்த காரணத்தால், ரூ.30 லட்சத்து 23 ஆயிரம், அதாவது 400 சதவிகித தொகையை அபராதமாக விதித்திருந்தது. நடிகர் விஜய் வணிகவரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, “எந்த அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது? உச்சநீதிமன்ற உத்தரவு எப்போது பிறப்பிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு வணிகவரித்துறை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கை பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். அதுவரை நடிகர் விஜய்யின் பி.எம்.டபிள்யூ சொகுசுக் கார் வழக்கில், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், அபராதத்தை வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை தமிழ்நாடு வணிக வரித்துறை உறுதி செய்யவேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.