லண்டன்: பிரிட்டனில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார கட்டமைப்பே செயலிழக்கும் அளவுக்கு சூழல் செல்வதால் அவர்கள் உதவிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திவிட்டனர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு 3-வது அலை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில் ஒமைக்ரான் பரவல் அச்சத்தால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தொடர்ந்து 2-வது ஆண்டாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் பிரிட்டனில் கரோனா தொற்று 90 ஆயிரத்துக்கும் அதிகமாகச் சென்றுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துவரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது மருத்துவ பணியாளர்களிடையே தீவிர அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மருத்துவமனைகளை முற்றுகையிட்டு வருவதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனைகளுக்கு ராணுவத்தை அனுப்பத் தொடங்கியுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று வாரங்களுக்கு லண்டனில் உள்ள தேசிய சுகாதார சேவைக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க ஆயுதப் படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஒமைக்ரான் மாறுபாட்டின் காரணமாக பிரிட்டனில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் 150,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்று பதிவாகியது.
மக்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதாலும் ஒமைக்ரான் மாறுபாட்டின் குறைந்த தீவிரத்தன்மை காரணமாகவும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதிலும் புதிய கட்டுப்பாடுகள் இல்லாமல் சமாளிக்க முடியும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். ஆனால் மக்கள் சுயமாக தனிமைப்படுத்தப்படுவது மட்டுமின்றி மருத்துமனைகளுக்கும் செல்வது அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து சுமார் 150,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. இரண்டு ஆண்டுகளாக உலுக்கி வரும் தொற்று நோயால் ஒமைக்ரான் பரவலுக்கு முன்பே மருத்துவ பணியாளர்கள் மனதளவில் நெருக்கடியை சந்தித்து வருகினறனர். தற்போது ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில் இது அவர்களை மேலும் பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் வரும் வாரங்கள் சவாலானவை என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மருத்துவமனை மட்டுமின்றி கோவிட்-19 சோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கும் கூட மக்களை கட்டுப்படுத்தவும், சுகாதாரப்பணியாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யவும் ஆயுதப்படை உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது.
‘‘லண்டனில் 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைத்து வரும் மருத்துவ பணியாளர்களுக்கு உதவ அவர்கள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இந்த கடினமான குளிர்காலத்தில் சுகாதார சேவைக்கு உதவுகிறார்கள். அங்கு தேவை அதிகம்’’ என்று சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் மருத்துவ சங்க கவுன்சில் தலைவரான சாந்த் நாக்பால் கூறும்போது ‘‘சுகாதார துறை முன்னெப்போதும் இல்லாத அளவில் ஊழியர்கள் இல்லாத நிலையில் இருக்கிறது. இது ஒரு தேசிய பிரச்சனை, இதற்கு முன் இந்த அளவு ஊழியர்கள் இல்லாததை நாங்கள் அறிந்ததில்லை.
நிலைமையை கட்டுப்படுத்த அரசு ராணுவத்தை நாடியிருந்தாலும், இந்த நேரத்தில் எங்களுக்கு உண்மையில் ஒரு தேசிய பிரச்சனை உள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது’’ எனக் கூறினார்.