சென்னை: கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிர்நீத்த மத்தியப் பிரதேச ராணுவ வீரர் நாயக் தீபக் சிங் என்பவரின் மனைவியும், தனது கணவரை போல நாட்டிற்கு சேவை செய்யும் பொருட்டு ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொள்ளவுள்ளார். இதற்காக ராணுவத் தேர்வில் அவர் தேர்ச்சிபெற்றுள்ளார்.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி நள்ளிரவில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். அவர்களை நமது வீரர்கள் தடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த 20 வீரர்களில் ஒருவர் மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள ஃபராண்டா கிராமத்தைச் சேர்ந்த நாயக் தீபக் சிங் கஹர்வார்.
எட்டு ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றிவந்த இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்புதான் திருமணம் செய்துள்ளார். திருமண பந்தத்தின் ஆரம்பகட்டத்திலேயே சீனா வீரர்களின் அத்துமீறலால் உயிரை இழந்துள்ளார். கார் ரெஜிமென்ட்டின் 16-வது பட்டாலியனை சேர்ந்த இவரின் வீரத்தை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை தீபக் சிங்கின் மனைவி ரேகா தேவி பெற்றுக்கொண்டார். ரேகா தேவி ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர்தான் தற்போது ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொள்ளவுள்ளார். இதற்கான ராணுவத் தகுதித் தேர்வான ஆளுமை மற்றும் நுண்ணறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ரேகா தேவி, சென்னை பரங்கிமலையில் அமைந்துள்ள ராணுவ அதிகாரிகளுக்கான (ஓடிஏ) பயிற்சி அகாடமியில் பயிற்சிக்கு சேரவுள்ளார்.
23 வயதாகும் ரேகா தேவி அலகாபாத்தில் நடந்த SSB (Services Selection Board) நேர்காணலில் தேர்ச்சிபெற்ற பிறகே, அவர் பெயர் ராணுவப் பயிற்சி அகாடமியில் சேருவதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ராணுவத்தில் லெப்டினன்ட்களாக ரேகா தேவி நியமிக்கப்படுவதற்கு முன்பு இந்த அகாடமியில் ஒன்பது மாதங்கள் பயிற்சி பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவர் நாட்டுக்காக செய்த அதே சேவையை தானும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ரேகா தேவி ஆசிரியர் வேலையை துறந்துவிட்டு, இந்த தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
SSB நேர்காணலுக்குத் தகுதிபெற USPC ஆணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சேவைத் தேர்வில் கலந்துகொள்வது அவசியம். ஆனால், நாட்டுக்காக உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகிறது. என்றாலும் வயது அதிகமாக இருந்தால் இதில் கலந்துகொள்ள முடியாது. ராணுவ பயிற்சி அகாடமியில் சேர்வதற்கு விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ரேகா தேவிக்கு 23 வயதே ஆவதால் அவரால் ராணுவ பயிற்சி அகாடமியில் இணைய முடிந்துள்ளது.