புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் துறவி முதல்வரான யோகி ஆதித்யநாத்திடன் இரண்டு துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும் இருப்பது தெரிந்துள்ளது. இந்த தகவல், அவர் போட்டியிடும் கோரக்பூரில் தாக்கல் செய்த மனுவில் வெளியாகி உள்ளது.
உ.பி.யில் ஆளும் பாஜகவின் முதல்வரான யோகி, சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.
இதனால், உ.பி.யில் ஆளும் பாஜகவின் முதல்வரான யோகி, முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தான் முறை போட்டியிட்டு வென்ற மக்களவை தொகுதியில் அமைந்துள்ள கோரக்பூர் நகர சட்டப்பேரவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
நேற்று யோகி தனது மனுவை தாக்கல் செய்த போது, பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவும் உடன் இருந்தார். இதில், முதல்வர் யோகியின் சொத்துப் பட்டியலும் தாக்கலானது.
இதில், முதல்வரின் சொத்தாக வெளியான தகவல் கேட்பவர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாகி விட்டது. ஏனெனில், துறவியான முதல்வர் யோகியிடம் இரண்டு துப்பாக்கிகளும் உள்ளன.
இத்துப்பாக்கிகளில் ஒன்றான கைத்துப்பாக்கி (பிஸ்டல்) ரூ.1 லட்சம் மற்றும் நீண்டத் துப்பாக்கி (ரைபிள்) ரூ.80,000 மதிப்பிலும் உள்ளன. இத்துடன் அவரது சொத்து மதிப்பு ரூ.1.54 கோடியிலானதாகவும் பதிவாகி உள்ளது.
முதல்வர் யோகியிடம் தங்கநகைகளும் உள்ளன. இவர் தனது மனுத்தாக்கலில் குறிப்பிட்டபடி, ரூ.49,000 மதிப்பிலான தங்கசெயின் உள்ளது.
இதர தங்கநகைகளின் மதிப்பு ரூ.26,000 எனவும் முதல்வர் யோகி குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் உள்ள ஸ்மார்ட்போனை பற்றியும் முதல்வர் யோகி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கைப்பேசியின் விலை மதிப்பு என வெறும் ரூ.12,000 குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் தனக்கு பேஸ்புக் மற்றும் ட்விட்டரிலும் இரண்டு கணக்குகள் இருப்பதையும் முதல்வர் யோகி பதிவு செய்துள்ளார்.
தற்போதைய கையிருப்பாக முதல்வரிடம் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக உள்ளது. தான் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் எஸ்பிஐ வங்கிக்கணக்கில் ரூ.25 லட்சத்து 99 ஆயிரத்து 171 ரூபாய் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோரக்பூரின் எஸ்பிஐ வங்கிக்கணக்கில் ரூ.7,908 வைத்துள்ளார். வைப்புத் தொகையும் முதல்வர் யோகிக்கு சில வங்கிகளில் டெபாசிட் செய்து பாதுகாப்பில் வைத்துள்ளார்.
இதன்படி, டெல்லி நாடாளுமன்ற வளாக எஸ்பிஐயில் ரூ.8 லட்சத்து 37 ஆயிரத்து 485 உள்ளது. கோரக்பூரின் பஞ்சாப் தேசிய வங்கியில் ரூ.4 லட்சத்து 32 ஆயிரத்து 751 உள்ளது.
இதே நகரின் பஞ்சாப் தேசிய வங்கியில் 7 லட்சத்து 12 ஆயிரத்து 636 ரூபாயும் வைப்பு தொகையாக உள்ளன. உபியின் தலைநகரான லக்னோவின் எஸ்பிஐ வங்கி வைப்புத் தொகையான 67 லட்சத்து 85 ஆயிரத்து 395 ரூபாயும் உள்ளன.
இதுவன்றி, தேசிய சேமிப்பாக டெல்லியின் நாடாளுமன்றத்தெருவின் தபால் நிலையத்தில் அவர், ரூ.36 லட்சத்து 24 ஆயிரத்து 708 இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கோரக்பூரிலுள்ள கோரக்நாத் பகுதி தபால் நிலையத்திலும் துறவியான முதல்வர் யோகியிடம் 2 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான கிசான் விகாஸ் பத்திரங்கள் உள்ளன.
தனது கல்வி குறித்து முதல்வர் யோகி குறிப்பிட்டுள்ளபடி அவர், முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதை அவர் 1992 இல் உத்தராகண்டிலுள்ள ஸ்ரீநகரின் எச்.என்.பகுகுணா பல்கலைகழகத்தில் அறிவியல் பாடத்தின் ஒரு பிரிவில் முடித்துள்ளார்.
தான் 2017 இல் உ.பி.முதல்வரான பின் மேல்சபைக்கு போட்டியிட்ட போதும் துறவியான யோகி தனது சொத்து மதிப்பை குறிப்பிட்டிருந்தார்.
பாக மொத்தம் ரூ.95 லட்சத்து 98 ஆயிரத்து 053 இருந்தது. இதில் அப்போது அவர் தன்னிடம் எஸ்யுவி வகை பெரிய வாகனங்கள் இரண்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அவற்றில் ஒன்றாக டொயாட்டா போர்சுனர் ரூ,13.11 லட்சத்திலும், டொயாட்டா இன்னோவா ரூ.8.72 லட்சம் மதிப்பிம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த தேர்தலில் அவர் தன்னிடம் வாகங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.
கடந்த முறை அவர் மீது இருந்த நான்கு வழக்குகள் இந்தமுறை ஒன்றுகூட இல்லாத வகையில் முடிந்து விட்டன. இவை உபி மாநிலத்தின் மகராஜ்கன்ச், கோரக்பூர் மற்றும் சித்தார்த்நகர் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தன.