5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் இருக்கும் டிஜிட்டல் பாகுபாட்டைச் சரிசெய்யும் என்று காட்டும் விதமாக, முதல் முறையாக இந்தியாவின் கிராமப்புறப் பகுதியில் 5ஜி சோதனை ஓட்டத்தை ஏர்டெல் நிறுவனமும், மொபைல் கருவி உற்பத்தியாளரான எரிக்ஸன் நிறுவனமும் நடத்திக் காட்டியுள்ளன.
டெல்லி நகரத்தைத் தாண்டி, பாய்பு பிரம்மணன் கிராமத்தில் இந்த சோதனை நடைபெற்றது. இதற்காக பிரத்யேக 5ஜி அலைக்கற்றை, தொலைத்தொடர்புத் துறையால் ஒதுக்கப்பட்டிருந்தது. மேம்படுத்தப்பட்ட மொபைல் பிராட்பேண்ட் மற்றும் நிலையான கம்பியில்லா இணப்பு சேவைகள் வழியாக எல்லாப் பகுதிகளிலும் அதிவேக பிராட்பேண்ட் சேவை கிடைக்கும் சாத்தியங்கள் அதிகம் இருப்பதை இந்த சோதனை காட்டியிருக்கிறது.
எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், 5ஜி என்பது அடுத்த தலைமுறை தொழில்நுட்பம். இதன் மூலம் கருவிகள், இயந்திரங்கள், பொருட்கள் என அத்தனையையும் இணைக்க முடியும். இணைப்பில் குறைந்தபட்ச வேக இழப்புடன் அதி விரைவுச் செயல்பாடு கிடைக்கும்.
5ஜி தொழில்நுட்பத்தால் கிராமப்புறங்கள், நகரங்கள் என ஒவ்வொரு மூலையிலும் இணைய சேவை கிடைக்கும் என்றும், இதனால் டிஜிட்டல் பொருளாதாரத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்க முடியும் என்றும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி ரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
மொபைல் பிராட்பேண்ட் பயன்பாடு 10 சதவீதம் அதிகமாகும்போது அது 0.8 சதவீதம் ஜிடிபி வளர்ச்சியில் எதிரொலிக்கிறது என்று எரிக்ஸன் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே, 5ஜி நெட்வொர்க் அமைப்பில் 1 ஜிபிபிஎஸுக்கும் அதிகமான வேகத்தைக் கொடுக்க முடியும் என்று ஏர்டெல் – எரிக்ஸனின் கூட்டு சோதனை முயற்சிகள் காட்டியிருக்கின்றன. இதற்காக பிரத்யேக மாதிரி அலைக்கற்றையைத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஒதுக்கியிருந்தது.