டெல்லி: நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இன்றைய மக்களை அமர்வின்போது, சுகாதார கட்டமைப்பு மேம்பாடு குறித்து உறுப்பினர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் பதில் அளித்தார்.
அப்போது, சுகாதார கட்டமைப்பு மேம்பாடு உயர்த்தப்பட்டு வருவதாகவும், நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காக மருத்துவக்கல்லூரிகள் உருவாக்கப் பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 157 மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தவர், இதில், 40 மருத்துவக் கல்லூரிகள் நாடு முழுவதும் ஆர்வத்துடன் வளர்ந்து வரும் பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுகின்றன என்றார். மேலும், இநத் 157 கல்லூரிகளில் 70 கல்லூரிகள் செயல்படத் தொடங்கி விட்டதாகவும், இந்த புதிய கல்லூரிகள் 16 மாநிலங்களைச் சேர்ந்தவை என்று தெரிவித்தவர், இதுவரை எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத பகுதிகளிலேயே இந்த புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.