புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதியை ஐக்கிய அரசு அமீரகத்தில் இந்திய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. இவனை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மும்பை மாநகரில் கடந்த 1993ம் ஆண்டு ஒரே நேரத்தில் 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 1400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்தன. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளுக்கு 1997ம் ஆண்டு, ‘சிகப்பு எச்சரிக்கை நோட்டீஸ்’ (ரெட் கார்னர்) வழங்கி, இந்திய புலனாய்வு அமைப்பு வலை வீசி தேடி வந்தது. இந்நிலையில், 29 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி அபு பக்கரை ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கூறியதாவது: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட முக்கிய தீவிரவாதியான அபு பக்கரை, இந்திய புலனாய்வு அதிகாரிகள் குழு ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்துள்ளது. விரைவில் அவனை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவன் பாகிஸ்தானில் தங்கி ஆயுதங்கள், வெடிகுண்டுகள் தயாரிப்பதில் பயிற்சி பெற்றவன். மும்பை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் ெவடிமருந்துகளை இவன்தான் வழங்கி இருக்கிறான். மும்பை குண்டுவெடிப்பு சதித்திட்டம், துபாயில் உள்ள தாவூத் இப்ராகிமின் வீட்டில் தீட்டப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஈரானை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வளைகுடா நாடுகளில் அபுபக்கர் பதுங்கி வாழ்ந்து வந்தான். மும்பையில் குண்டுவெடிப்பு நடத்துவற்காக நிழல் உலகத் தாதா தாவூத் இப்ராகிமின் ஆலோசனைபடி, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களுக்கு வெடிகுண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. தனது கடத்தல் தொழில் மூலம் அரேபிய கடல் வழியாக மும்பைக்கு வெடிபொருட்களை கொண்டு வந்தனர். அதன்பின் பெரும் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றினர். 29 ஆண்டுகளுக்கு பின் அபு பக்கரை இந்திய புலனாய்வு அமைப்புகள் கைது செய்திருப்பது விசாரணை அமைப்புகளின் வெற்றியாகவும், முக்கிய திருப்பமுனையாகவும் பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.