நோக்கியா மொபைல் போன்களைத் தயாரிக்கும் ஹெச் எம் டி குளோபல் நிறுவனம், புதிய அடிப்படை வசதிகள் கொண்ட 4ஜி மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா 110 4ஜி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாடலின் விலை ரூ.2,799. ஜூலை 24 முதல், மஞ்சள், ஆக்வா, கருப்பு ஆகிய நிறங்களில் அமேசான் இணையதளத்திலும், நோக்கியாவின் தளத்திலும் இந்த மொபைல்கள் கிடைக்கும்.
எஃப் எம் ரேடியோவை ஹெட்செட் இல்லாமல் கேட்கும் வசதி, எம்பி3 ப்ளேயர், 32 ஜிபி வரை மெமரி கார்ட் பயன்படுத்தும் வசதி, பிரபலமான ஸ்னேக் விளையாட்டு எனப் பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த மாடலில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன.
மேலும், இதன் பிரதான கேமரா 0.8 மெகா பிக்ஸல் அளவில் க்யூவிஜிஏ (qvga) வடிவில் இடம்பெற்றுள்ளது. வயதானவர்களுக்கு வசதியாக, திரையில் தோன்றும் எழுத்துகளைத் தானாகப் படித்துக் காட்டும் வசதியும் இதில் உள்ளது. பேட்டரி 1020 எம்ஏஹெச் திறன் கொண்டது. 4ஜி மாடல் என்பதால் அழைப்புகளில் குரல் துல்லியம் அதிகமாக இருக்கும் என்று நோக்கியா தெரிவித்துள்ளது.
“எங்கள் ரசிகர்கள் விரும்பும், நம்பும், வைத்துக்கொள்ள விரும்பும் மாடலாக இது இருக்கும்” என்று ஹெச் எம் டி குளோபல் துணைத் தலைவர் சன்மீத் சிங் கூறியுள்ளார்.