50 நாட்களில் ரூ.365 கோடி வசூலித்த 'புஷ்பா'
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து டிசம்பர் மாதம் 17ம் தேதி வெளிவந்த படம் 'புஷ்பா'.
தெலுங்கில் தயாரான இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளியானது. படம் வெளியாகி 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இப்படம் உலகம் முழுவதிலும் ஐந்து மொழிகளையும் சேர்த்து 365 கோடி வசூலித்துள்ளதாக படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹிந்தியில் 100 கோடி ரூபாய் நிகர வசூலை அள்ளி அல்லு அர்ஜுனை பான்–இந்தியா ஸ்டாராக உயர்த்தியுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. முதல் பாகத்திற்குக் கிடைத்துள்ள வசூலின் காரணமாக இரண்டாம் பாகத்தை இன்னும் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம்.