கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பைசல் யூசுப் ஆரம்பித்த தள்ளுவண்டி டீக்கடையான ‘தி சாய் வாலா’, விரைவில் வெளிநாட்டிலும் கிளையை திறக்க உள்ளது.
பள்ளிப்படிப்பை முடிக்காத பைசல், வேலைக்காக அலைந்துள்ளார். ஒரு வழியாக மும்பையில் ஒரு வேலை கிடைத்தது. அதை பற்றிக்கொண்டு அங்கிருந்து துபாய்க்குச் சென்றார். நாட்கள் ஓடின. நண்பர்கள் உதவியுடன் இங்கிலாந்தில் காஃபி இறக்குமதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஏழு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தார். ஆனாலும், தேயிலைமீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. விதவிதமான தேயிலைகளை, அவற்றின் மணத்தை, சுவையை ஆராய்வதில் ஆர்வம் காட்டினார். ஒரு கட்டத்தில், சொந்தமாக தொழில் தொடங்கும் எண்ணம் தோன்றியது.
இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய பைசல், 2018-ம் ஆண்டு இறுதியில் ஆலப்புழாவில் ‘தி சாய் வாலா’ என்ற பெயரில் தள்ளுவண்டி டீக்கடையை தொடங்கினார். 50 வகையான தேயிலைகள் அவரிடம் உண்டு. இதனால், அவரதுகடையில் டீ குடிக்க மக்கள் அலைமோதினர். அது கொடுத்த உற்சாகத்தில், வேறு சில இடங்களிலும் ‘தி சாய் வாலா’ கிளையை திறக்கஆரம்பித்தார். இன்று அவரது டீக்கடைக்கு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என 3 மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. விரைவில் துபாயில் டீக்கடை திறக்க உள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 1000 கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளார். ஓமன், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் கிளைகள் திறக்கும் எண்ணத்தில் உள்ளார்.
குறைந்த விலையில், சுத்தமான பானத்தை வழங்குவதன் மூலம் தள்ளுவண்டி டீக்கடையில் டீ அருந்துவதை நல்ல அனுபவமாக மாற்றுவதே தன்னுடைய நோக்கம் என்று அவர் கூறுகிறார்.