சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது.
இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இன்று முதல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
காணொலி வாயிலாகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளார். இன்று மாலை 5 மணியளவில் கோவை மாவட்டத்தில் இருந்து அவர் தனது காணொலி பிரசாரத்தை தொடங்குகிறார்.
இந்த காணொலி காட்சி பிரசாரத்தை மக்கள் பார்க்கும் வகையில், கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100 வார்டுகளிலும் எல்.இ.டி தொலைக்காட்சிகளில்
மு.க.ஸ்டாலின்
பிரசாரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதுதவிர 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் 200 இடங்கள் என மாவட்டம் முழுவதும் 300 இடங்களில் மு.க.ஸ்டாலினின் பிரசார காணொலி காட்சி ஒளிபரப்பப்படுகிறது.
இந்த பிரசாரத்தின்போது கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக அவர் மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.
இதனை தொடர்ந்து நாளை சேலம் மாவட்டத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டுகிறார். 8-ந் தேதி கடலூர், 9-ந் தேதி தூத்துக்குடி, 10-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
11-ந் தேதி கன்னியாகுமரி, 12-ந்தேதி திருப்பூர், 13-ந் தேதி திண்டுக்கல், 14-ந்தேதி மதுரை, 15-ந்தேதி தஞ்சை மாவட்டத்திலும் காணொலி பிரசாரம் மேற்கொள்கிறார். இறுதியாக 17-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து
மு.க.ஸ்டாலின்
பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நாளை சிவகாசியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். சிவகாசி கம்ம வார் மண்டபத்தில் நாளை காலை நடைபெறும் பிரசார கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
சிவகாசி பிரசாரத்தை முடித்துவிட்டு நாகர்கோவில் செல்வதற்கு எடப்பாடி பழனிசாமி முதலில் திட்டமிட்டு இருந்தார். தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிவகாசியில் பிரசாரத்தை முடித்துவிட்டு நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் நெல்லை மாநகராட்சியில் போட்டியிடும் 55 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார்.
தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் அவர் வருகிற 14-ந்தேதி தூத்துக்குடி, நெல்லையில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
நாளை கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாநகராட்சி பகுதியிலும், நாளை மறுநாள் (8-ந்தேதி) நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்தும், திருச்செந்தூர் நகராட்சி பகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
வருகிற 9-ந்தேதி மதுரை மாநகராட்சி, கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர் நகராட்சி பகுதிகளில் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார். மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியில், (மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் அருகில்) சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
அதன்பிறகு சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களை கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வேட்பாளர்களுக்கு வழங்கினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். நாளை ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அவர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்ள சீமான் திட்டமிட்டு உள்ளார்.
தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக டி.டி.வி. தினகரனும் பிரசாரம் செய்கிறார்.
தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. களம் காண்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. தே.மு.தி.க., மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவையும் தனித்து போட்டியிடுகின்றன. இதன் மூலம் தேர்தல் களத்தில் 8 முனைப்போட்டி நிலவுகிறது.