இந்தியாவின் நைட்டிங்கேல் என செல்லமாக அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 8.12 மணிக்கு உயிரிழந்தார்.
கடந்த மாதம் 11ம் தேதி கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லதா மங்கேஷ்கர்.
அவரது உடல்நலம் தேறி வந்த நிலையில், நேற்று நிலைமை மோசமடைந்தது, கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சையின் போது பல்வேறு உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் இன்று காலை 8.12 மணிக்கு மரணமடைந்தார்.
யார் இந்த லதா மங்கேஷ்கர்?
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் 1929 ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி பிறந்தவர் லதா மங்கேஷ்கர்.
இவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கர், மராத்தி மொழியில் நன்கு அறியப்பட்ட பாடகர் ஆவார், இவரது ஐந்து குழந்தைகளில் முதல் குழந்தை தான் லதா மங்கேஷ்கர்.
இவரது இயற்பெயர் ஹேமா, இவரது தந்தையின் நாடகங்களில் லத்திகா எனும் பாத்திரத்தில் நடித்து வந்ததால் அனைவரும் “லதா” என அழைக்கத் தொடங்கினர், கடைசியில் இதுவே அவரது பெயராகிப்போனது.
1949ஆம் ஆண்டு மகள் எனும் இந்தி படத்தில் முதன்முறையாக பாடலை பாடத் தொடங்கினார் லதா, தொடர்ந்து பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்களை பாடி திரையுலகில் உச்சத்தை பெற்றார்.
மூன்று முறை தேசிய விருதையும், இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார்.
இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது 2001ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன்னதாக அவர் பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
1999 – 2005 ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் நியமன உறுப்பினராகவும் இருந்துள்ளார் லதா மங்கேஷ்கர்.