கொரோனா தொற்று காரணமாக மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த மாதம் 8ஆம் தேதி பழம்பெரும் பாடகி
லதா மங்கேஷ்கர்
அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியூ வார்டில் வைத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து 20 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு லதா மங்கேஷ்கர் உடல்நலம் தேறியது. இதனால் கடந்த வாரம் வெண்டிலேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது. ஆனால், நேற்று அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது என மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார். இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான அவர், பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷண், தாதா சாஹேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மெலடி குயின் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கருக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பாடகி லதா மங்கேஷ்கரின் பாடல்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தின; அவரின் சாதனைகள் ஒப்பிட முடியாதவை என்று லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசு தலைவர்
ராம்நாத் கோவிந்த்
இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
தனது ட்விட்டர் பக்கத்தில், ““நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறேன். அன்பான மற்றும் அக்கறையுள்ள லதா நம்மை விட்டுப் பிரிந்தார். நம் நாட்டில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். இனிவரும் தலைமுறையினர் அவரை இந்திய கலாச்சாரத்தின் தலைசிறந்த ஒருவராக நினைவு கூர்வார்கள், அவரது மெல்லிசை குரல் மக்களை மயக்கும் இணையற்ற திறனைக் கொண்டிருந்தது.
லதாவின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தின. திரைப்படங்களுக்கு அப்பால், அவர் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்தார். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவையே அவர் காண விரும்பினார்.
லதா திதியிடம் நான் எப்போதும் அளவற்ற பாசத்தைப் பெற்றிருப்பதை எனது மரியாதையாகக் கருதுகிறேன். அவருடனான எனது தொடர்பு மறக்க முடியாததாக இருக்கும். லதாவின் மறைவால் வாடும் சக இந்தியர்களுடன் நான் துக்கப்படுகிறேன். அவரது குடும்பத்தினரிடம் பேசி ஆறுதல் கூறினேன். ஓம் சாந்தி.” என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும். நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.