`பார்களை மூட வேண்டும்..!’ – நீதிமன்ற உத்தரவு யாருக்கான செக்?!

தனியாரிடமிருந்த மதுபான சில்லரை விற்பனையை 2003-ம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்றுநடத்தி வருகிறது. இதற்காக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ஐ திருத்தி, தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003 என்ற சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. அதன்படி, தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. அன்று முதலே, மதுக்கடைகளை ஒட்டி, தனியார் சார்பில் அமர்ந்து மது அருந்துவதற்காகவும், காலி பாட்டில் சேகரிப்பு மற்றும் திண்பண்டங்கள் விற்பனை என்ற பெயரில் பார்களுக்கான டெண்டரும் விடப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா

வருடந்தோறும் விடப்பட்டுவந்த டெண்டரை, கடந்த 2019-ல் அ.தி.மு.க அரசு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றியமைத்தது. அதன்படி, 2019 செப்டம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டு, 2021 செப்டம்பரோடு டெண்டர் காலம் முடிந்துவிட்டது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றது. ‘24 மாத டெண்டரில், சுமார் 15 மாதங்கள் கொரோனா ஊரடங்கினால் பார்களை மூடியே வைத்திருந்தோம், இதனால் பொருளாதார ரீதியிலான பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால், மேற்கொண்டு இரண்டாண்டுகள் டெண்டர் இல்லாமல் நீட்டிப்புக் கொடுக்க வேண்டும்’ என்று பார் உரிமையாளர்கள் தமிழக அரசை வலியுறுத்தினர். இருந்தபோதும் அதைக் கண்டுகொள்ளாத அரசு, 2021 டிசம்பர் 31 வரை மட்டும் அனுமதியை நீட்டித்ததோடு, அதேநாளன்று புதிய டெண்டர் விடப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

எனினும் டெண்டர் எடுத்தவர்களிடம் பார் நடத்துவதற்கு இடமும், கட்டட உரிமையாளர்களின் தடையில்லாச் சான்றும் இல்லாதக் காரணத்தினால், எங்குமே பார்களைத் திறக்க முடியாத சூழல் நிலவிவருகிறது. இந்த நிலையில்தான், புதிய டெண்டரை ரத்து செய்துவிட்டு, ஏற்கெனவே பார்களை நடத்தி வந்த தங்களுக்கே உரிமத்தை நீட்டித்துக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

பார்

இதனை விசாரித்த நீதிபதி சரவணன், இருதரப்பு வாதங்களையும் கேட்டுவிட்டு பிப்ரவரி 4-ம் தேதி தீர்ப்பளித்தார். அதில், “மது விற்பதற்கு மட்டுமே டாஸ்மாக் நிறுவனத்துக்கு அனுமதி உள்ளது. பார் நடத்தும் உரிமம் வழங்க கலால்துறைக்கு மட்டுமே உரிமையுண்டு. பார்களில் மது குடிப்பதை ஊக்குவிக்க டாஸ்மாக் நிறுவனம் விரும்பினால், மதுவிலக்குச் சட்டத்தில் உரியத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். சட்டத் திருத்தம் வரும் வரை, விதிகள் வகுக்கப்படும் வரை, பார் டெண்டர் விட டாஸ்மாக் நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது. டெண்டரைத் திரும்பப் பெற வேண்டும். டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை ஆறு மாதங்களுக்குள்ளாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டதோடு, வழக்கையும் தள்ளுபடி செய்தார்.

சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக் குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், பார் கட்டட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் அன்பரசனிடம் பேசினோம். “இத்தனையாண்டுகள் நன்றாக சென்றுகொண்டிருந்த டெண்டர், அமைச்சர் செந்தில் பாலாஜியால்தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரு தனிநபரின் தேவைக்காக இத்தனைக் குடும்பங்களும், டாஸ்மாக் நிறுவனமும் பலிகடா ஆகியுள்ளது. சுமூகமாக சென்றபோது அமைச்சர் தலையிட்டதால், நாங்கள் போராட்டம் நடத்தினோம், வழக்குப் போட்டோம். அமைச்சர் தலையிடாமல் இருந்திருந்தால், எப்போதும்போல நடந்திருக்கும். இந்தத் தீர்ப்பு எங்களுக்கு எதிரானத் தீர்ப்பு அல்ல, டாஸ்மாக் நிறுவனத்துக்கு எதிரானது மட்டுமே. ஆறு மாதங்களுக்குள் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் அதன்பிறகு பார்களை மூட வேண்டும் என்றுதான் தீர்ப்பில் உள்ளது.

அன்பரசன், பார் உரிமையாளர் சங்கம்

டாஸ்மாக் நிறுவனத்துக்குப் பதிலாக கலால்துறைதான் லைசென்ஸ் கொடுக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் செய்திட வேண்டும். அப்படியில்லையெனில், ஆறு மாதங்களுக்குள் பார்களை மூட வேண்டும் என்றுதான் உத்தரவில் உள்ளது. இதை நம்பியே வாழ்க்கையை ஓட்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும். குடிமகன்கள் சாலையோறங்களிலும், தெருக்களிலும் பகிரங்கமாகக் குடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்னையும் ஏற்படும் என்பதால், அரசு இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திட வேண்டும்” என்றார்.

டாஸ்மாக் நிறுவனம்

டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளிடம் பேசியபோது, “இது டாஸ்மாக் நிறுவனத்துக்கும், பார் உரிமையாளர்களுக்கும் இழப்புதான். பார் உரிமையாளர்கள் சங்கத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் கட்சி சாராதவர்கள் என்றால், மீதமுள்ள கட்சி சார்ந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் தி.மு.க-வினர்தான். அ.தி.மு.க ஆட்சி இருந்தவரைக் கூட அவர்களுக்கு இந்தளவுக்கு நெருக்கடி ஏற்பட்டதில்லை” என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் பெற முயன்றோம். ஆனால், நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் விளக்கம் தரும்பட்சத்தில், அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிடத் தயாராக இருக்கிறோம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.