இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 92 வயதில் மறைந்தார். இவரது இறப்புக்கு இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய வருத்தங்களைத் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், `சத்யா’ படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா லதா மங்கேஷ்கரின் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
” நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பை. லதா மங்கேஷ்கர் பாட்டு கேட்டு வளர்ந்தவன். அவங்க பாடுன பாட்டெல்லாம் மனப்பாடமா சொல்லுவேன். அந்தளவுக்கு லதா மங்கேஷ்கர் பாட்டு மட்டும் கேட்டே இருப்பேன். சொல்லபோனா குழந்தை பருவம், டீன் ஏஜ்னு லதா அம்மாவுடைய பாட்டோட வாழ்ந்தவன் நான். எதையும் மறக்க முடியாது. ரொம்ப நேசித்த பிண்ணனி பாடகி லதா மங்கேஷ்கர். பாலசந்தர் சார்கிட்ட Ek Duuje Ke Liye இந்தி படத்துல உதவி இயக்குநரா வேலைப் பார்த்தபோ லதா மகேஷ்கர் ரெக்கார்ட்டிங் தியேட்டர்ல படத்துகாக பாட்டுனது மறக்கவே மாட்டேன். எஸ்.பி.பி சார்கூட சேர்ந்து பாடுனாங்க. அதுதான் அவங்களை முதல்முறை நேர்ல பார்த்தது. மெய் மறந்து போயிட்டேன். இதுக்கு அப்புறம் இயக்குநரா முதல் படம் `சத்யா’. அப்போ, நானும் கமலும் படத்துல இருக்குற லவ் ரொமான்ட்டிக் பாட்டு பற்றி பேசிக்கிட்டு இருக்கோம். அப்போ இளையராஜா சார், ‘லதா சென்னைல இருக்காங்க. அவங்களை பாட வைப்போம்னு’சொன்னார்.
எனக்கு ஆச்சரியம் தாங்கல. ஏன்னா, என்னோட முதல் படத்துலயே லதா அம்மா பாடுறாங்க. சின்ன வயசுல பார்த்து வியந்து போன பாடகி. என்ன சொல்லனு தெரியல. அதுவும், Ek Duuje Ke Liye படத்துல பாடுனா எஸ்.பி.பி மற்றும் லதா காம்பினேஷன். என்னால, நம்ப முடியல. ‘வளையோசை’ பாட்டு ரெக்கார்டிக் போயிட்டு இருந்தது. ரசிச்சு கேட்டுட்டு இருந்தேன். இப்போ வரைக்கும் ‘வளையோசை’ பாட்டுக்கு ரசிகர்கள் இருந்துட்டு இருக்காங்க. எல்லாரும் பேசுறாங்க.
” இந்தப் பாட்டு பாடுறதுக்கு முன்னாடி வாலி சாரின் வரிகளை வாங்கி படிச்சு பார்த்துக்கிட்டே இருந்தாங்க. சரியான உச்சரிப்புடன் பாடுனாங்க. பாலு சார் பக்கத்துலயே இருந்தார். அவர்கிட்ட ` நான் சரியா உச்சரிக்கறனானு’ கேட்டு கேட்டு பாடுனாங்க. ஒரு ஸ்டூடண்ட் மாதிரி நடந்துக்கிட்டாங்க. அவ்வளவு டெடிகேஷன் லதா அம்மாகிட்ட இருந்தது. பாட்டு ஓகே ஆனதுக்கு பிறகும்கூட, ‘எல்லாம் சரியா பாடுனேனா, தப்பாயிருந்தா சொல்லுங்க திரும்பவும் பாடுறேன்னு’ ராஜா சார்கிட்ட கேட்டுட்டு நின்னாங்க. ரெக்கார்ட்டிங் தியேட்டர்ல லதா அம்மா தமிழ்ல பாடுனா பாட்டை கேட்டது வேறொரு அனுபவத்தைக் கொடுத்தது.
இப்போகூட, என்னோட ஆபிஸ்ல அவங்ககூட எடுத்த போட்டோ இருக்கும். இப்போ, கோவிட்னால லதா அம்மா இறந்துட்டாங்கனு கேட்டது வருத்தமா இருந்தது. `Nightingale of India’னு லதா அம்மாவை சொல்றதுல தவறே இல்ல. ஆயிரம் படங்களுக்கு மேலே பாடியவர். அவங்க இறப்பை நினைச்சு பார்க்க முடியல. இப்போ லதா அம்மா உயிரோட இல்ல. ஆனா, அவங்க குரல் எப்பவும் கேட்டுக்கிட்டே இருக்கும்.” என்றார்