லதா மங்கேஷ்கர் பிறந்தது மத்திய பிரதேசம் இந்தூரில். 1929 செப்டம்பர் 28. வீட்டின் முதல் பிள்ளை. அப்பா தீனாந்த் மங்கேஷ்கர், நாடகம் மற்றும் இசை கலைஞர். அம்மா ஷிவந்தி, குஜராத்தி.
லதா அவர்களின் பெயரிலுள்ள மங்கேஷ்கர் அப்பாவிடம் இருந்து வந்தது. கோவாவில் உள்ள சொந்த ஊரான மங்கேஷி என்பதைக் குறிக்கிறது. லதாவுக்கு முதலில் வைத்த பெயர் ஹேமா. லதா என்கிற பெயர் அப்பாவின் நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர்.
லதாவுக்கு பாடல்கள் பயிற்சியானது முதலில் குஜராத்தி மொழியில்தான். அம்மா வழி பாட்டியே அவருக்கு நாட்டுப்புற பாடல்களை சொல்லிக் கொடுத்தார். அப்பாவின் நாடகங்களில் சிறுவயது முதலே பாடி வந்தாலும் 13 வயதில் அப்பா இறந்தபோது தான் இவர் தனக்காக பாடல்களை பாடத் தொடங்கினார்.
மாஸ்டர் விநாயக்- அப்பாவின் நண்பர், லதாவுக்கு முதலில் வாய்ப்பளித்தார். மராத்தியில்தான் இவரது முதல் பாடல் என்றாலும் அது கடைசி நேரத்தில் நீக்கப்பட்டது. இந்தியில் அவரது முதல் பாடல் 1943-ல் வெளிவந்தது.
ஒரே ஒரு நாள் மட்டுமே பள்ளிக்குச் சென்றுள்ளார் லதா. பள்ளியின் முதல் நாளே தன் தங்கையான ஆஷாவை அழைத்து வந்து மாணவர்களுக்கு இசை கற்றுத் தர ஆரம்பித்தார், அதற்கு ஆசிரியர்கள் கண்டித்ததால், பள்ளியை விட்டு நிரந்தரமாக நின்றுவிட்டார்.
அவரது பட்டு போன்ற குரல் இந்தி, மராத்தி மட்டுமில்லாது இந்தியாவின் பல மொழிகளிலும் பாடும் வாய்ப்பை பெற்று தந்தது. 36 மொழிகளில் 30000 பாடல்களுக்கு மேல் லதா மங்கேஷ்கர் பாடியிருக்கிறார்.
முன்னதாக ஃபிலிம்பேர் விருதுகளில் சிறந்த பின்னணிப் பாடகிக்கானத் தனிப் பிரிவு இல்லை. இதனை சுட்டிக்காட்டி லதா குரல் கொடுத்தார், 1958 முதல் பெண்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகின்றது.
1969 இல் வளர்ந்து வருகிற பாடகர்களுக்காக தன்னுடைய பிலிம் பேர் விருதை விட்டுக் கொடுத்தார் லதா மங்கேஷ்கர்.1955 இல் மராத்தி திரைப்படமான ராம் ராம் பவானாவிற்கு முதல் முறையாக இசையமைத்தார். “சதி மனாஸே” என்ற படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற மஹாராஷ்டிர அரசின் விருது பெற்றார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பிறகு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது பெற்ற ஒரே பின்னணிப் பாடகி இவர் தான்.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். பிரான்ஸ் அரசாங்கம் அவருக்கு 2007-இல் ‘ஆபிசர் லெஜியன் ஆஃப் ஹானர்’ விருதை வழங்கியது, இது அந்நாட்டின் உயரிய சிவிலியன் விருதாகும்.
லதா மங்கேஷ்கர் ஒருமுறை பாலிவுட் ஹங்காமாவிடம் பேட்டி கொடுக்கையில் தனது சொந்த பாடல்களை கேட்பதில்லை என்றார். தனது பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அவற்றில் குறைகள் மட்டுமே தெரிவதாகவும் சொன்னார்.
லதா 1999 முதல் 2005 வரை கௌரவ எம்.பி.யாகவும் சிறிது காலம் பதவி வகித்தார்.
இந்திப் படமான உரன் கடோலா தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இதில் `எந்தன் கண்ணாளன்’ என்ற பாடலை லதா பாடியிருந்தார். இளையராஜா இசையில் ஆனந்த் படத்திற்கு 1987-இல் இவர் பாடிய `ஆராரோ’ பாடல் இவரது முதல் நேரடி தமிழ்ப் பாடல்.
உயிரே படத்திற்காக `நெஞ்சினிலே நெஞ்சினிலே’ பாடல் தமிழில் ஜானகி அவர்கள் பாட இந்தி வெர்சனில் லதா `ஜியா ஜலே’ என ரஹ்மான் இசையில் பாடினார்.
`வளையோசை’ எவர்கிரீன் பாடலான இதற்கு இளையராஜா இசையமைக்கும் போது வாலியிடம் ‘இந்தப் பாடலை லதா பாடவுள்ளார், எளிமையாக இருக்கும் படி’ கேட்டு கொண்டார். அதற்காக வாலி இரட்டை கிளவி பயன்படுத்தி எழுதிய பாடல் இது.
ஜனவரி 27, 1963 அன்று, புதுதில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், லதாவின் “ஏய் மேரே வதன் கே லோகன்” என்ற தேசபக்தி பாடலைக் கேட்டு பிரதமர் ஜவஹர்லால் நேரு கண்ணீர் வடித்தார். 1962-இல் நடந்த மோதலில் இறந்த ராணுவ வீரர்களின் நினைவாக இந்தப் பாடல் எழுதப்பட்டது.
உடல்நலக்குறைவு காரணமாக லதா சில வருடங்களாக பாடுவதில் இருந்து விலகி இருந்தார். அவர் கடைசியாக 2015-இல் ஒரு பாடலைப் பதிவு செய்திருக்கிறார். லதா மங்கேஷ்கர் இந்தியர்களின் மனங்களில் இசையாக என்றும் வாழ்வார்!