திருமலை: திருமலையில் இருந்து ஸ்ரீவாரி பாதம் செல்வதற்கு இன்று முதல் பஸ் சேவை தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் உள்ள பாபவிநாச தீர்த்தம், அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்திரியில் உள்ள அஞ்சனாதேவி-பால ஆஞ்சநேயர் சுவாமி கோயில், ஆகாச கங்கை, ஜாபாலி ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக ஆந்திர போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள நாராயணகிரி மலை உச்சியில் உள்ள ஸ்ரீவாரி பாதம் செல்வதற்கு அரசு பஸ் போக்குவரத்து வசதி இல்லை. இதனால் பக்தர்கள் தனியார் ஜீப், கார்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் முதன்முறையாக நாராயணகிரி மலை உச்சியில் உள்ள ஸ்ரீவாரி பாதத்தை பக்தர்கள் தரிசிக்கும் விதமாக பஸ் சேவை தொடங்க முடிவு செய்தது. அதன்படி பஸ் சேவை இன்று தொடங்கியது. இந்த பஸ் அனுபவமுள்ள டிரைவர்களை கொண்டு இயக்கப்படுகிறது. திருமலையிலிருந்து ஸ்ரீவாரி பாதம், சிலாதோரணம் (இயற்கை கற்பாறை வளைவு) ஆகியவற்றை பார்வையிட ₹55 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரே டிக்கெட்டில் அரசு பஸ்சில் சென்று திருமலையில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களையும் காணும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக திருமலை அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் விஸ்வநாதன் தெரிவித்தார்.