மும்பை: முப்படை, மாநில காவல்துறை மரியாதையுடன் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் இசைக்குயில் என்று அழைக்கப்பட்டவருமான லதா மங்கேஷ்கர் (92), கடந்த 29 நாட்களாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா, நிமோனியா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை நேற்று மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டார். கவலைக்கிடமான நிலையில் அவர் இருந்ததால், நேற்றிரவு முதல் அரசியல், பாலிவுட் பிரபலங்கள் மருத்துவமனைக்கு நேரில் வந்து, அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தனர். பிரதமர் மோடி சார்பில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு வந்து, லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரை சந்தித்தார். இந்த நிலையில், இன்று காலை 9.45 மணிக்கு லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். லதா மங்கேஷ்கரின் மறைவு செய்தியை கேட்டு அவரது ரசிகர்களும், அரசியல், பாலிவுட் பிரபலங்களும் அதிர்ச்சிடைந்தனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே, ஒன்றிய, மாநில அமைச்சர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். லதா மங்கேஷ்கரின் நினைவாக இன்றும், நாளையும் தேசிய துக்கம் தினமாக அனுசரிக்கப்படும் என்றும், இந்த இரண்டு நாட்களும் லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து, லதா மங்கேஷ்கரின் உடல் மருத்துவமனையில் இருந்து, அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக அவரது வீட்டிற்கு படையெடுத்தனர். இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. முப்படை வீரர்கள் மற்றும் மராட்டிய காவல்துறையினர் இறுதி மரியாதை செலுத்தினர். லதா மங்கேஷ்கர் உடலுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. லதா மங்கேஷ்கரின் உடலில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மும்பை சிவாஜி பூங்காவில் முப்படை, மாநில காவல்துறை மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.