புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாங்கிய கரோனா பரிசோதனை சாதனங்களில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் தெர்மா மீட்டர், பிபிஇ கிட், நான்கு சர்க்கர நாற்காலிகள் மாயமாகியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு ஆளுநரிடம் புகார் தரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய டிஜிட்டல் தெர்மோ மீட்டர், பிபிஇ கிட், குப்பை தொட்டி மற்றும் நான்கு சக்கர நாற்காலிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் அளிப்பதற்காக நலவழித் துறையினர் மூலம் வாங்கி தேர்தல் துறைக்கு அளிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்தபிறகு வாக்குச்சாவடிகளில் இருந்து இச்சாதனங்கள் நலவழித்துறைக்கு ஒப்படைக்கவில்லை. இச்சாதனங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு பயன்பாட்டுக்கு தந்திருக்க வாய்ப்புண்டு.
ஆனால், அவை என்னவானது என்பதை கண்டறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்து கிடைத்த தகவல்களை புகாராக ஆளுநர், தலைமைச்செயலர் ஆகியோரிடம் மனுவாக தந்துள்ள ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறியதாவது: “தேர்தலுக்காக வாங்கி தந்த சாதனங்கள் நிலைபற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நலவழித்துறையிடம் தகவல் கேட்டதற்கு அவர்கள் தகவல் தரவில்லை. பின்பு மேல்முறையீடு செய்தததின் பேரில் மேற்கூறிய கரோனா பரிசோதனை உபகரணங்கள் அனைத்தும் ரூ.1.07 கோடிக்கு டிஜிட்டல் தெர்மா மீட்டர், பிபிஇ கிட், நான்கு சக்கர நாற்காலிகள், குப்பைத்தொட்டிகள் வாங்கி, தேர்தல் துறையினரிடம் வழங்கிவிட்டோம். தேர்தலுக்குப் பிறகு இச்சாதனங்களை திரும்ப பெற்றதாகவோ, பொருட்களுக்கான பதிவேட்டில் பதிவு செய்ததற்கான தகவல் இல்லை” என்று தெரிவித்தனர்.
இதையடுத்து மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பொருட்களுக்கான பதிவேட்டில் உள்ள திரும்ப பெற்ற சாதனங்களின் அடிப்படையில் பார்க்கும்போது ரூ.29. 53 லட்சம் மதிப்பிலான 300 நான்கு சக்கர நாற்காலிகள், 858 டிஜிட்டல் தெர்மோ மீட்டர்கள், 2670 பிபிஇ கிட்கள், 445 குப்பை தொட்டிகள் ஆகிய சாதனங்கள் மாயமாகி போனது தெரியவந்தது.
இந்த உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு அளிக்கும்போது அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு அளித்த தேர்தல் துறையினர், அந்த பொருட்களை திரும்ப பெறும்பொழுது, அளித்த எண்ணிக்கையின்படி உபகரணங்களை திரும்ப பெற்றிருக்க வேண்டும். வாங்கிய பொருட்களை திருப்பி அளிக்காத தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீது அப்போதே உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போய் உள்ளது. இதற்கு தேர்தல் துறையினரே பொறுப்பேற்க வேண்டும்.
எனவே, இதுகுறித்து அலட்சியமாக பணியாற்றியுள்ள தேர்தல் துறை ஒப்படைக்காத தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீதும், திரும்ப பொருட்களை அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீதும் உரிய விசாரணை செய்து இந்த காணாமல் போன பொருட்களுக்கான தொகைகளை வசூலித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர், தலைமைச்செயலர் ஆகியோரிடம் மனு தந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.