நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், கணவன் மனைவி என 9 ஜோடிகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஒரே குடும்பத்தினருக்கு கவுன்சிலர் சீட்டுகளை அள்ளிவிட்ட கட்சிகள் எந்தெந்த கட்சிகள் என்று பார்ப்போம்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தில் 2 பேர் சுயேச்சையாக போட்டியிட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் ஆளும் கட்சி திமுகவிலும் எதிர்க்கட்சியான அதிமுகவிலும் ஒரே குடும்பத்தில் இருந்து கணவன் மனைவி ஜோடியாக போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளித்து சீட்டுகளை வாரி வழங்கி இருக்கின்றன.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் கணவன், மனைவி என 9 ஜோடிகள் போட்டியிடுகிற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரே குடும்பதினருக்கு சீட்டுகளை எந்தெந்த கட்சிகள் அள்ளி வழங்கி இருக்கின்றன என்று பார்ப்போம்.
ஆற்காடு நகராட்சி முன்னாள் துணை தலைவர் பொன்.ராஜசேகர் ஆற்காடு நகராட்சியில் 2வது வார்டில் திமுக வேட்பாளராகவும், அவரது மனைவி உஷா 15வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். அதேபோல, அதிமுக இணை மாவட்ட செயலாளர் கீதா ஆற்காட்டில், 27வது வார்டில் போட்டியிடுகிறார். அவருடைய கணவர் முன்னாள் கவுன்சிலர் என்.சுந்தர் 30வது வார்டில் போட்டியிடுகிறார். இவர்களின் மகன் பிரவீன்குமார் 14வது வார்டில் போட்டியிடுகிறார். இப்படி, ஆற்காடு நகராட்சியில் குடும்பமே தேர்தலில் குதித்திருக்கிற்து.
சோளிங்கர் பேரூராட்சியில், திமுக மாவட்ட தலைவர் அசோகன், 14வது வார்டிலும் அவருடைய மனைவி தமிழ்செல்வி, 13வது வார்டிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அதே சோளிங்கர் பேரூராட்சியில், திமுகவை சேர்ந்த பழனி, 1வது வார்டிலும் அவருடைய மனைவி வேண்டா 3வது வார்டிலும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
மேலும், அதே சோளிங்கர் பேரூராட்சியில், அருண் ஆதி 24வது வார்டிலும் அவருடைய மனைவி தீபா அரசி 25வது வார்டிலும் திமுக சார்பில் உதய சூரியன் போட்டியிடுகின்றனர். சோளிங்கர் பேரூராட்சியில், கணவன் மனைவி என ஜோடியாக போட்டியிடுவது திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் ஜோடியாக போட்டியிடுகின்றனர். சோளிங்கர் பேரூராட்சியில், அதிமுக நகர தலைவர் வாசு 3வது வார்டிலும் அவருடைய மனைவி பிரியா 4வது வார்டிலும் போட்டியிடுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பேரூராட்சியில், இதற்கு முன்னர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றா முன்னாள் கவுன்சிலர் கே.ஏ.செல்வம், இந்த முறை அமமுக சார்பில் ஜோலார்பேட்டை பேரூராட்சியில் 17வது வார்டிலும், அவருடைய மனைவி எஸ்.ஜோதி 9வது வார்டில் அதே அமமுக கட்சியிலும் போட்டியிடுகின்றனர்.
இப்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 9 ஜோடிகள் போட்டியிடுகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 ஜோடிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு ஜோடியும் போட்டியிடுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“