நீட் எதிர்ப்பில் இருந்து பின் வாங்க மாட்டோம் – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, காணொலி வாயிலாக, கோவை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பெரும்பான்மை பலத்தால் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, உள்ளாட்சி அமைப்புகளிலும் முழுமையான வெற்றியைப் பெற்றால்தான் நாம் நிறைவேற்றும் திட்டங்களை மக்களுக்கு முழுமையாகக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும். 
கொரோனா காலக் கட்டுப்பாடுகள் இருப்பதால் உங்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்க முடியாத சூழல் இப்போது இருக்கிறது.
கோவை மாநகர் முழுதும் உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் சாலைகள் அமைக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.நீண்ட நாட்களாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் தேதி குறிப்பிட்டு முடிக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறேன்.குடிநீர் இணைப்பு கேட்டு காத்திருப்போருக்கு வெளிப்படைத் தன்மையோடு இணைப்பு வழங்கப்படும். வீடுகட்ட அனுமதி பெற எளிமையான வழிமுறைகள் கையாளப்படும். சிறு குறு தொழில் முனைவோர்க்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படும். வார்டு வாரியாகக் குறைதீர்ப்பு முகாம் மாதம்தோறும் நடத்தப்படும். 
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வளரவேண்டும் – அனைத்துத் துறைகளும் வளரவேண்டும் என்பதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஆட்சி திமுக ஆட்சி.
தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் போராடியும் வாதாடியும் பெறுகிற  ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இருக்கும். நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வலியுறுத்தும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்று தெரிந்ததும்  மறுநாளே அதாவது, நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினோம். 
அடுத்ததாக, வரும் 8-ஆம் நாள் – அதாவது செவ்வாய்க்கிழமை, தமிழ்நாடு சட்டமன்றம் கூட இருக்கிறது. மீண்டும் அதே மசோதாவை இன்னும் வலிமையோடு நிறைவேற்றப் போகிறோம். 
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு சட்ட மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. அதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு மதிக்கவே இல்லை; பல மாதம் கிடப்பில் போட்டது. 
காரணம் எதுவுமே சொல்லாமல் – குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இந்தத் தகவல் தமிழ்நாடு அரசுக்குச் சொல்லப்பட்டும், சட்ட அமைச்சராக இருந்த சி.வி. சண்முகம் அதனை மூடி மறைத்துவிட்டார்.  
நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி உரிமையை பல போராட்டங்களுக்குப் பிறகு மீட்டு, சில பத்தாண்டுகளாகத்தான் பலரும் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். படித்தால் தானாகத் தகுதி வந்து வாழ்க்கையில முன்னேறிவிடுவார்கள். ஆனால் படிப்பதற்கே உனக்குத் தகுதி வேண்டும் என்று தடுக்கும் பழைய சூழ்ச்சியின் புது வடிவம்தான் நீட். 
அதனால்தான் நாம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்க்கிறோம். மருத்துவப் படிப்புகளில் சேர்வதாலேயே யாரும் மருத்துவர் ஆகிவிட மாட்டார்கள். 
மருத்துவப் படிப்புகளில் தேர்ச்சி அடைந்தால்தான் டாக்டர் ஆவார்கள். அப்படித்தான் உலகின் தலைசிறந்த டாக்டர்களாக நமது தமிழ்நாட்டு டாக்டர்கள் இருக்கிறார்கள். நீட் தேர்வை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. அதன் முகமூடியைக் கழட்டிப் பார்க்க வேண்டும்.வெறுமனே அரசியலுக்காக எதிர்க்கவில்லை. மக்கள் விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்ப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. 
மக்களுக்கு எதிரான அவ்வளவு செயல்களை அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். எனவே நீட் தேர்வை வைத்துதான் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நீட் தேர்வு என்பதே 2016-ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசாங்கத்தால் திணிக்கப்பட்டதுதான்.  
அந்தத் தேர்வுக்கு 2016-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் 2016-17-ஆம் ஆண்டுக்கான தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைத்தது; நான் மறுக்கவில்லை. இதே எதிர்ப்பைத் தொடர்ந்து காட்டி இருந்தால் தேர்வை நடத்தாமல் விட்டிருப்பார்கள். 
ஆனால், அ.தி.மு.க. அரசு  2017-18 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வைத் தலையாட்டி ஏற்றுக் கொண்டதுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். இதோ இப்போது ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்டமசோதாவை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்ப இருக்கிறோம். நீட் எதிர்ப்புல பின்வாங்க மாட்டோம். நீட் மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டம் எது வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.