மண்டியா: மண்டியா மாவட்டத்தில் குஜராத் மாநிலத்தை குழந்தைகள் உள்பட 5 பேர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த கங்காராம், துணி வியாபாரம் செய்து வருகிறார். மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணம் தாலுகாவிலுள்ள கேஆர்எஸ் பஜார் பகுதியில் குடும்பத்துடன் வசித்துள்ளார். துணி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் என்பதால் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளி மாநிலத்திற்கு கங்காராம் மற்றும் அவரின் சகோதரர் செல்வது வழக்கமாகும். கடந்த 3 நாள் முன்பு கங்காராம், ஆந்திராவுக்கு செல்கிறேன் என கூறிவிட்டு அவரின் அண்ணனை அழைத்து கொண்டு சென்றுவிட்டார். கங்காராம் மனைவி லட்சுமி, (26), அவரின் குழந்தைகள் ராஜ்(12). கோமல் (7), குணால்(4), கங்காராமின் அண்ணன் மகன் கோவிந்த் (8) ஆகியோரை பார்த்துக்கொண்டு வீட்டில் இருந்துள்ளார்.கங்காராம் அடிக்கடி வெளி மாநிலத்திற்கு செல்வதால் லட்சுமி எவ்வித பயம் இன்றி குழந்தைகளுடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் கங்காராம் வீடு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தில் வசிக்கும் லட்சுமியின் உறவினர்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. நீண்ட நேரம் லட்சமி வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அத்துடன் குழந்தைகளின் சத்தமும் கேட்கவில்லை அவர்களையும் வெளியே காணவில்லை என்பதால் பக்கத்தில் வசித்த கீதா பாய் என்பவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து லட்சுமி என குரல் கொடுத்துக்கொண்டே கீதா பாய், கதவை தள்ளி பார்த்த போது கதவு தானாகவே திறந்து கொண்டது. அப்போது உள்ளே கண்ட காட்சியால் கீதாபாய் ஒரு நிமிடம் எதுவும் பேசமுடியாமல் நின்று விட்டார்.அவரின் மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது. அதற்கு காரணம் வீட்டின் உள்ளே லட்சுமி மற்றும் குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததே. உடனே வீட்டை விட்டுவெளியே வந்த கீதா பாய் இந்த தகவலை அனைவருக்கும் தெரிவித்தார். அடுத்த நிமிடம் கேஆர்எஸ் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்த மண்டியா மாவட்ட போலீஸ் எஸ்பி., யதீஷ் மற்றும் போலீஸ் ஐ.ஜி.பி. பிடவீண் மதுகர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். போலீஸ் தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் அங்கே பதிவாகியிருந்த தடங்களை பதிவு செய்தனர். இது குறித்து மண்டியா மாவட்ட போலீஸ் எஸ்பி யதீஷ் கூறுகையில், கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. பணம் மற்றும் நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என மேலோட்டமாக தெரிகிறது. லட்சுமியின் கணவர் கங்காராமுவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக போலீஸ் ஐஜிபி பிரவீண் மதுகர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பெண் உள்பட 5 பேர் கூர்மையான ஆயுதங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொலைக்கான காரணத்தையும் கொலையாளிகளையும் விரைவில் கைது செய்வோம். இது தவிர வேறு எதையும் இப்போது கூற முடியாது என்றார். ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மண்டியா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.