கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 92.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்ற லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 2 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், 2 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லதா மங்கேஷ்கரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை உயர்நீதிமன்றம் உள்பட அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இசைப் பேரரசியின் மறைவுக்கு இரங்கல், அவரது மறைவு துணைக் கண்டத்தின் இசை அரங்கில் பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என்று தமது இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பாடல்கள் மூலம் மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்வார் என்று ஹசீனா கூறியுள்ளார். லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தன்னுடைய குரலால் லட்சக் கணக்கான மனங்களை மகிழ்ச்சியால் நிறைத்தவர்.
அவரது இனிய பாடல்கள் உலகம் முழுவதும் பரவியிருப்பதுடன் என்றும் நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தினர் மற்றும் இந்திய மக்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவின் இசைப்பறவை ஆத்மா அமைதி அடையட்டும் என தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், லதா மங்கேஷ்கர் கருணையின் மொத்த உருவகம் என்று கூறியுள்ளார்.
கருணை, பணிவு மற்றும் எளிமையின் உருவகமாக அவர் இருந்தார், முன்பு கிஷோர் குமாரும் இப்போது லதா மங்கேஷ்கர் மரணமும் எனது இசையை உடைத்து விட்டன. இவ்வாறு ரமீஸ் ராஜா ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்…
பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு – உலக தலைவர்கள் இரங்கல்