சம்பா:
ஐம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் எல்லையை தாண்டி போதைப் பொருட்களை கடத்த முயன்ற மூன்று பாகிஸ்தானிய கடத்தல்காரர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
கடத்தல்காரர்கள் பாகிஸ்தானில் இருந்து பயணித்து, சர்வதேச எல்லையைத் தாண்டி, பிளாஸ்டிக் பைப் மூலம், எல்லை வேலி வழியாக போதைப் பொருளைக் கடத்த முயன்றதாக எல்லைப் பாதுகாப்பு படையின் ஜம்மு எல்லைப்புற இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.கே.பூரா தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களாக போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் குறித்து எங்களுக்கு தகவல் வந்ததாகவும், அதன் அடிப்படையில் எல்லையில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்ததாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் கடத்தல்காரர்களிடம் இருந்து 36 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் போதைப் பொருள் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடத்தல்காரர்கள் ஏதேனும் பயங்கரவாத அமைப்புடன்தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. இந்த ஆண்டு எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களால் முறியடிக்கப்பட்ட நான்காவது கடத்தல் முயற்சி இதுவாகும், கடந்த ஒரு வருடத்தில் மொத்தம் ஒன்பது பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளர்.