இஸ்லாமாபாத்,
பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார்.
இந்தியாவின் இன்னிச்சைக்குயில் என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92. அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவக்கும் விதமாக இரண்டு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரண்டு நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய தகவல் ஒலிபரப்பு மந்திரி அனுராக் சிங் தாக்குர், உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
மத்திய மந்திரி நிதின் கட்கரி, இன்று காலை பிரீச் காண்டி மருத்துவமனைக்குச் சென்று லதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். லதா மங்கேஷ்கரின் உடல் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி பியூஷ் கோயல், மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, கோவா முதல்-மந்திரி பிரமோத், சரத் பவார், சச்சின், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து முப்படை, மராட்டிய காவல்துறை முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழுங்க லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அவரின் மறைவுக்கு உலக தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி ஃபவாத் செளத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு சரித்திரம் முடிவுக்கு வந்துள்ளது.
லதாமங்கேஷ்கர் ஒரு மெல்லிசை ராணி, பல பத்தாண்டுகளாக இசை உலகை ஆண்டவர். அவர் இசையின் முடிசூடா ராணி, அவரது குரல் இனி வரும் காலங்களிலும் மக்களின் இதயங்களை ஆட்சி செய்யும்” என பதிவிட்டுள்ளார். மூத்த பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
லதா மங்கேஷ்கரின் மறைவால், உலகம் அறிந்த சிறந்த பாடகிகர்களில் ஒருவரை துணைக்கண்டம் இழந்துவிட்டது. இவரது பாடல்களைக் கேட்பது உலகம் முழுவதும் உள்ள பலருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.