பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். அவர் பதவியேற்று 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் முழு அளவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வில்லை. இதனால் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்த முறை அமைச்சர் பதவியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று மூத்த பாஜ எம்எல்ஏக்கள் முயன்று வருகின்றனர். இதற்காக தங்களுக்கு நெருங்கிய பழக்கமுள்ள தலைவர்களை சந்தித்து லாபியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாரிய, கழக பதவிகளை பிடிப்பதற்கும் பாஜ கட்சியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். அதன்படி முதல்வர் பசவராஜ் பொம்மை டெல்லியில் பாஜ எம்.பிக்களுடன் கர்நாடக பவனில் சந்தித்து இன்று பகல் 1 மணி அளவில் பேசுகிறார். அத்துடன் நீர்ப்பாசனம் மற்றும் நிதித்துறை அமைச்சர்களை சந்திக்கவும் முடிவு செய்துள்ளார். இவ்வாறு முதல்வர் பசவராஜ் பொம்மையின் டெல்லி பயணம் தொடர்பாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதே நேரம் முதல்வர் டெல்லி பயணத்தின் முக்கிய நோக்கம் அமைச்சரவை விரிவாக்கம் செய்வது, யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்கலாம், புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது தொடர்பாக மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதாகும். முன்னாள் ஒன்றிய அமைச்சர் பசனகவுடா உள்ளிட்டோர் அடிக்கடி கட்சி விதிகளை மீறி பேசி வருவதால் அது குறித்து புகார் அளிக்கவும் முதல்வர் பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்பதால் அது தொடர்பாக பாஜ தலைமையிடம் விவாதித்து சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெறுவதற்கும் முதல்வர் பசவராஜ்பொம்மை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அமைச்சரவையில் தற்போது 4 இடம் மட்டும் காலியாக இருக்கின்றன. அதே நேரம் 25க்கும் மேற்பட்ட நபர்கள் போட்டி போடுவதால் யாருக்கு அமைச்சர் பதவி வழங்கலாம்? அதே நேரம் மூத்த அமைச்சர்களில் சிலர் தேவையற்ற கருத்துகளை கூறி விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக அமைச்சர் உமேஷ் கத்தி, முக கவசம் அணிய மாட்டேன் என பேசினார். அத்துடன் அமைச்சராக திறமையாக செயல்படவில்லை என முதல்வர் பசவராஜ்பொம்மை கருதுவதால் அவரை பதவி நீக்கம் செய்வதற்கு கட்சி மேலிட தலைமையிடம் கோரிக்கை விடுப்பார் என்றும் அது போல் 12க்கும் மேற்பட்ட நபர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு பதில் புதிய நபர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாகவும் முதல்வர் பசராஜ்பொம்மை மேலிட தலவைர்களுடன் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.முதல்வர் டெல்லி செல்லும் நிலையில் பெங்களூருவில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். கிருஷ்ணா, மகதாயி மற்றும் காவிரி உள்ளிட்ட நதி நீர் பிரச்னையில் மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேகதாது அணை கட்டுவதை வலியுறுத்தி பாதயாத்திரை நடந்த நிலையில் இந்தபிரச்னையில் எடுக்கவேண்டிய முடிவுகள் குறித்து தீவிரமாக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் அமைச்சர் கார்ஜோள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.எனவே, முதல்வர் பசவராஜ் பொம்மையின் டெல்லி பயணத்தின் போது மாநிலத்தின் நலனிற்காக ஒன்றிய அமைச்சர்களை சந்திப்பது, கர்நாடக எம்பிக்களுடன் சந்தித்து பேசுவது மட்டும் இன்றி மாநில பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவும் முதல்வர் பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார். இது மட்டும் இன்றி அமைச்சரவை மாற்றம் செய்வது தொடர்பாக கட்சி தலைவர்களின் ஆலோசனை மற்றும் அனுமதியை பெறுவதற்காகவும் முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.