சமூக ஊடகங்களில் தாக்கம் ஏற்படுத்தும் ஆளுமைகள், தாங்கள் விளம்பரப்படுத்தும் உள்ளடக்கங்கள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய விளம்பத் தர நிர்ணய கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய விளம்பத் தர நிர்ணய கவுன்சிலின் (ASCI) புதிய வரைவறிக்கையில், டிஜிட்டல் ஊடகங்களில் தாக்கம் ஏற்படுத்தும் ஆளுமைகள், யூடியூப் பதிவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களுக்குப் பிடித்தமான பிராண்டட் பொருட்கள் என்று கூறிப் பதிவிடும்போது, அது விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளடக்கமாக இருந்தால் அதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துப் பதிவர்களும் சம்பந்தப்பட்ட பொருள் அல்லது சேவை குறித்த தங்களின் பதிவு, விளம்பரத்தின் ஒரு பகுதியா என்பதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
மொபைல் போன்கள் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் விளம்பர லேபிள்கள் தெளிவாகத் தெரியும்படி வீடியோ உள்ளடக்கங்கள் இருக்க வேண்டும். ஆடியோ பதிவில் விளம்பரம் தொடர்பாக அறிவிப்பு, உள்ளடக்கத்தின் முன்னரும் பின்னரும் குறிப்பிடப்பட வேண்டும். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ளடக்கத்தின் மீது விளம்பர அறிவிப்பு குறித்துப் படம் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பொருள் மீது சிறப்பு வெளிச்சம் பாய்ச்சி, மிகைப்படுத்திக் காட்டக்கூடாது.
அதேபோல, விளம்பரங்களில் கூறப்படும் தகவல்கள் உண்மையானவையா, உறுதிப்படுத்தப்பட்டவையா என்று டிஜிட்டல் ஊடக ஆளுமைகள் சரிபார்க்க வேண்டியதும் அவசியம். முக்கியமாக, பார்வையாளர்களிடம் ”நீங்கள் விளம்பரத்தையே பார்க்கிறீர்கள்/ கேட்கிறீர்கள். தகவல்களை அல்ல” என்று குறிப்பிட வேண்டும் என இந்திய விளம்பத் தர நிர்ணய கவுன்சிலின் வரைவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.