புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தில் இம்மாதம் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறார். காங்கிரசுக்கு இந்தக் கூட்டணி கடும் சவாலை அளிக்கும் எனத் தெரிகிறது.
நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியிலும், சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் மோகா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையே, லூதியானாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் சரண்ஜித் சிங் என நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக தலித் ஒருவர் முதல் மந்திரி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தியின் முடிவை பஞ்சாப் மக்கள் வரவேற்றுள்ளனர்.
சரண் ஜித் சிங் சன்னியை முதல் மந்திரி வேட்பாளராக தேர்வு செய்துள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…லாரிடிரைவர்கள் போராட்டம் நீடிப்பு – கனடாவில் அவசரநிலை பிரகடனம்