Tamilnadu Localbody Election Update : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து ஆண்டு இறுதியில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும என்று அரசியல் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், பிப்ரவரி 19-ந் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும், 1064 மாநகராட்சி உறுப்பினர்கள் (21 மாநகராட்சிகள்), 3468 நகராட்சி உறுப்பிளர்கள் (138 நகராட்சிகள்), 8288 பேரூராட்சி உறுப்பினர்ள் (490 பேரூராட்சிகள்) என மொத்தம் 12820 பதவிகளுக்கான நகர்புற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ந் தேதி தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து அரசியில் கட்சியின் வேட்பாளர்கள், மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என பலரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல்செய்தனர். கடந்த 4-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இதுவரை 74416 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த 5-ந் தேதி வேட்புமனு பரிசீலனை பெற்றது. இதனைத் தொடர்ந்து வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து வேட்புமனுக்களை திரும்ப பெற முடிவு செய்த வேட்பாளர்கள் இன்று மாலை 5 மணிக்குள் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும், இன்று மாலை நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மாலை 5 மணியுடன் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. எனவே இன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும். மேலும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலுடன் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்படும்.
இந்தநிலையில், வேட்பாளர்கள் தங்களது பகுதிகளில் பிரச்சாரம் செய்ய தீவிரம் காட்டி வருகினறனர். இதனால் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
“ “