புதுடில்லி: உத்தர பிரதேசத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுரம் கட்டடம் உச்ச நீதிமன்றம் உத்தரப்படி இரு வாரங்களுக்குள் இடித்து தள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உ.பி.,யில் நொய்டா நகரில் ‘சூப்பர்டெக்’ என்ற நிறுவனம் 40 மாடி இரட்டை கோபுர குடியிருப்பை கட்டியுள்ளது. இரு கட்டடங்களில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது.
இந்நிலையில், வீட்டிற்கு முன்பணம் செலுத்தும் போது காட்டிய வரைபடத்திற்கும், கட்டடம் கட்டப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளதாக குடியிருப்போர் நலச் சங்கம், சூப்பர்டெக் நிறுவனம் மீது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரத்தை இடிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சூப்பர்டெக் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நொய்டா பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் ஊழல் மலிந்துள்ளது. கடந்த 2009ல் இந்த ஆணையம் சட்ட விரோத மாக சூப்பர்டெக் நிறுவனத்தின் கட்டுமானத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. விதிகளை மீறி, பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இரட்டை கோபுரம் இடிக்கப்பட வேண்டும். அத்துடன், குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு ரூ. 2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை கடந்தாண்டு அக்டோபரில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து இன்னும் இருவாரங்களுக்குள் இரட்டை கோபுர கட்டடம் இடித்து தள்ளுவதற்கான நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
Advertisement