டில்லி
கொரோனா நிவாரணத்துக்காக அமைக்கப்பட்ட பி எம் கேர்ஸ் நிதியில் ரூ.10,990 கோடி வசூலாகி அதில் ரூ.3,976 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காகப் பிரதமர் மோடி பி எம் கேர்ஸ் என்னும் நிதி அமைப்பைக் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதற்குத் தொழிலதிபர்கள்,. பொதுமக்கள்,. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் எனப் பலரும் நன்கொடை அளித்தனர். .
இந்த நிதியில் கடந்த 2021 ஆம் வருடம் மார்ச் 31 வரை அதாவது ஒரே வருடத்தில் ரூ.10,990 கோடி வசூலாகி உள்ளது. இதில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நான்கே நாட்களில் ரூ.3,077 வசூல் ஆகி உள்ளது. இந்த நிதிக்கு சென்ற வருடம் ரூ.7,679 கோடி நன்கொடை வசூலாகி உள்ளது. தவிர வட்டி ரூ.235 கோடி கிடைத்துள்ளது.
ஆனால் சென்ற வருடம் வரை இந்த பி எம் கேர்ஸ் நிதியில் இருந்து ரூ.3,976 கோடி மட்டுமே செலவாகி உள்ளது. இதில் ரூ.1,392 கோடியைக் கொண்டு 6.36 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தவிர இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50000 வெண்டிலேட்டர்கள் ரூ.. 1,311 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியின் மூலம் வாங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் பல பழுதடைந்துள்ள நிலையில் அதைப் பழுது பார்க்கும் ஊழியர்கள் யாரும் இல்லாத நிலை உள்ளது. மேலும் மத்தியப் பிரதேசம், காஷ்மீர்,, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஊழியர்கள் இல்லாததால் இந்த வெண்டிலேட்டர்கள் உபயோகிக்காமல் வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் கொரோனா தொற்றுக் காலத்தில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை நாட்டுக்கு அழைத்து வ்ர ரூ.1000 கோடி செலவிடப்பட்டுள்ளது. தவிர 162 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் ரூ. 201.58 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
தவிர அரசு நடத்தும் பரிசோதனை நிலையங்களில் கொரோனா பரிசோதனைக்காக மேம்படுத்த ரூ. 20.41 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் கொரோனாவுக்காக மட்டும் 2 மருத்துவமனைகள் ரூ.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பி எம் கேர்ஸ் நிதியில் ஓராண்டில் வசூலான ரூ.10,990 கோடியில் 64% அளவுக்கு நிதி உபயோகப்படுத்தாமல் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தவிர தற்போதைய நிதி ஆண்டு குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் இந்த நிதி குறித்துப் பல சந்தேகங்கள் எழுப்பி உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.