திரிபுரா
பாஜக எம்எல்ஏக்கள்
சுதீப் ராய் பர்மன், ஆசிஷ் சாஹா இருவரும் கட்சியை விட்டு மட்டுமல்லாமல் தங்களது எம்எல்ஏ பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுதீப் ராய் பர்மன் கூறுகையில், இந்த அரசு மக்களுக்கான சேவையிலிருந்து தவறி விட்டது, தோல்வி அடைந்து விட்டது. ஒன்மேன் கட்சியாக இது மாறி விட்டது. எந்த எம்எல்ஏவும், அமைச்சரும் தங்களது கடமையை செய்ய முடியவில்லை. அவர்கள் சொல்வது எதுவும் நடப்பதில்லை. அமைச்சர்களின் உத்தரவுகளை யாரும் மதிப்பதும் இல்லை. மாநிலம் முழுவதும் தீவிரவாதம் பெருகி விட்டது. ஜனநாயகத்தின் குரல் வளை முறிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலத்தில் மீண்டும் ஜனநாயகத்தைக் கொண்டு வர வேண்டியது நமது கடமை. அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் காக்க வேண்டியது எங்களது கடமை. சர்வாதிகார மனப்பான்மைதான் மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறது என்று கடுமையாக கூறியுள்ளார்.
இரு எம்எல்ஏக்களும் சபாநாயகர் ரத்தன் சக்கரவர்த்தியை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களையும் கொடுத்துள்ளனர்.
ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர் பர்மன். முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்து பாஜகவுக்குத் தாவியவர். தற்போது மீண்டும் காங்கிரஸுக்கே அவர் திரும்பவுள்ளார். பல்வேறு முக்கியத் துறைகளை வகித்த முன்னாள் அமைச்சரும் கூட. இவரது தந்தை முன்னாள் முதல்வர் சமீர் ரஞ்சன் பர்மன் ஆவார். இவரது விலகல் பாஜகவுக்கு பெரும் சரிவைக் கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த ராஜினாமாக்கள் காரணமாக சட்டசபையில் பாஜகவின் பலம் 33 ஆக குறைந்துள்ளது. சட்டசபையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 60 ஆகும்.
திரிபுரா
பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு கட்சி மேலிடத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இருப்பினும் இதுவரை கட்சி சார்பில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. திரிபுரா சட்டசபைக்கு 2023ல் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. திரிபுராவில் சமீப காலமாக திரினமூல் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சியைக் கண்டு வருவதும் முக்கியமானது.