வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு அந்த சட்டங்களின் அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திமுக -வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா என்றும், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கு முன்பு அந்த சட்டங்களின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், செயல்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அந்த பதிலில், புதிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்ற போது, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அமைச்சகத்திடம் எந்த தகவலும் இல்லை, அப்படி அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது என்பது சம்பந்தப்பட்ட மாநில அரசுகளையே சாரும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய சட்டம் நிறைவேற்றப்பட்டபின், அவை முடிவுக்கு வந்தன என்றும், ரத்து செய்யப்பட்ட இந்த மூன்று சட்டங்களின் அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், செயல்கள் உள்ளிட்டவை தொடர்புடைய சட்ட விதிகளால் நிர்வகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.