புதுடில்லி: தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயம் இல்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 80 சதவீத மக்களுக்கு முதல் 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு விட்டது. கொரோனா தாக்கம் இன்னும் முழுமையாக விலகாத நிலையில் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்தலாமா என்று விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்னும் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை காட்டினால்தான் தடுப்பு மருந்து செலுத்தப்படுமா என முன்னதாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு தற்போது மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கோவின் இணையதளத்தில் பதிவு செய்யவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் ஆதார் கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்த மனுதாரர் இக்குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டு விரைவில் அவருக்கு வேண்டிய உதவியை மத்திய சுகாதாரத் துறை கண்டிப்பாக செய்யும் என்று உறுதி அளித்துள்ளது.
சுகாதாரத் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆமன் ஷர்மா இதுகுறித்துக் கூறுகையில், நாட்டில் 87 லட்சம் குடிமக்களுக்கு ஆதார் அட்டை இல்லாமல் வேறு ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டியும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்த ஆதாரை கேட்கக்கூடாது என்று மனுதாரர் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் தெரிவித்தார். கோவின் இணையதளத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள குடிமக்கள் முன்பதிவு செய்யும்போது ஆதார் கட்டாயம் என்கிற முறையை தொழில்நுட்ப ரீதியாக மாற்ற மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Advertisement