புதுடெல்லி:
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி,கொரோனா முதல் அலையின் போது புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி தூண்டி விட்டதாகவும், மேலும் அந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக ரெயில் டிக்கெட்டுகளை வழங்கியது என்றும் தெரிவித்திருந்தார்.
அதேபோல் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் டெல்லியை விட்டு செல்லலாம், அதற்கு பேருந்து வசதி செய்து தரப்படும் என டெல்லி அரசு கூறியதாகவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.
இதன் விளைவாக பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவியது என்றும் தமது பேச்சின்போது பிரதமர் குற்றம் சாட்டியிருந்தார்.
பிரதமரின் இந்த கருத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது ட்விட்டர் பதிவில் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளதாவது பிரதமரின் இந்த அறிக்கை அப்பட்டமான பொய்.
கொரோனா காலத்தின் வலியால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அன்புக் குரியவர்களை இழந்தவர்கள் குறித்து பிரதமர் உணர்வார் என்று நாடு நம்புகிறது. இது பிரதமருக்கு ஏற்புடையதல்ல. இது மக்களின் துன்பங்களை வைத்து செய்யப்படும் அரசியல். இவ்வாறு கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்…பல தேர்தல்களில் தோற்றாலும் காங்கிரஸ் கட்சி அகங்காரத்தை கைவிடவில்லை – பிரதமர் மோடி தாக்கு