பிஜ்னோர்: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி என்பது போலி சமாஜ்வாதிகள் (சோசலிஸ்ட்டுகள்) மற்றும் அவர்களின் நெருங்கியவர்களுடன் நின்று போனது என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக, இந்த ஏழு கட்ட தேர்தலிலும் நேரடிப் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. சிறிய குழுக்களுடன் வாக்காளர்களின் வீடு வாசலில் சந்தித்து வாக்கு சேகரிக்க மட்டும் அனுமதிக்கப்பட்டது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் தேர்தலுக்கு ஒரு சில நாட்களே இருப்பதால் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு விதிக்கப்பட்ட தடையில் தேர்தல் ஆணையம் சில மாற்றங்களை செய்துள்ளது. இதனால் பிரதமர் மோடி இன்று உ.பி.யின் பிஜ்னோர் செல்லவிருந்தார்.
மோசமான வானிலை காரணமாக தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்தார். இதனையடுத்து அவர் காணொலி வாயிலாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
அடுத்த 25 ஆண்டுகளில் நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, உ.பி. தனது வளர்ச்சிப் பாதையில் ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும். இங்குள்ள தொழிலதிபர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க பாஜக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சமாஜ்வாதி கட்சி உ.பி.யை ஆண்டபோது மாநிலத்தின் வளர்ச்சி தேங்கி நின்றது. சாமானியனின் வளர்ச்சி, முன்னேற்றம், வறுமையில் இருந்து விடுபடுவது என எதும் அப்போது நடக்கவில்லை. சமாஜ்வாதி கட்சியினர் செய்ததெல்லாம் தங்களுடைய பணப்பெட்டியின் தாகத்தைத் தணிப்பதும் மட்டுமே. தங்களுக்கு நெருக்கமானவர்களின் தாகத்தைத் தணிப்பதும்தான். இந்த சுயநலவாதிகளின் செயலால் மாநிலத்தின் வளர்ச்சி மூழ்கடிக்கப்பட்டது.
உ.பி.யின் வளர்ச்சி ஆற்றில் தண்ணீர் தேங்கி நின்றது போல நின்றது. வளர்ச்சி என்பது போலி சமாஜ்வாதிகள் மற்றும் அவர்களின் நெருங்கியவர்களுடன் நின்று போனது.
அவர்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. அச்சத்தில் இருந்து பெண்களை விடுவித்தது முதல்வர் யோகியின் அரசு தான். பெண்களுக்கு உண்மையான மரியாதையை வழங்கியதும் யோகி அரசு தான்.
இவ்வாறு அவர் பேசினார்.