பீஜிங் ஒலிம்பிக்; பயோ-பபிள் தனிமைப்படுத்தலில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு பணிவிடை செய்யும் ரோபோக்கள்

பீஜிங்,
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவாமல் ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற சீன அரசு பீஜிங் நகருக்குள் இன்னொரு நகரத்தை கட்டமைத்து உள்ளது.
பிரத்யேகமாக கட்டமைக்கப்பட்டுள்ள அந்த நகரத்தில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு நிர்வாக ஊழியர்கள் பயிற்சியாளர்கள் என அதனை சார்ந்தவர்கள் மட்டுமே இருப்பார்கள்.வெளி உலகிலிருந்து, அதாவது பீஜிங் நகரவாசிகளிடமிருந்து கொரோனா தொற்று ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த அமைப்பை சீன அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. வீரர்கள் அனைவரும் பயோ பபிள் எனப்படும் தனிமைப்படுத்தலில் தங்கியிருக்கிறார்கள்.
அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்கு பணிவிடை செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.அந்த ரோபோக்கள், வீரர்களுக்கு காதில் மாட்டி பாட்டு கேட்கும் இயர்பாட்கள், உணவு உள்ளிட்ட பல  பணிவிடைகளை மேற்கொள்கின்றன.
கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க ஓட்டல் ஊழியர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வீரர்கள் தங்கள் அறைகளில் இருந்து கொண்டே உணவை ஆர்டர் செய்யும் வசதி உள்ளது. ஆர்டர் செய்த உணவை ரோபோ கொண்டு வந்து அவர்கள் தங்கியிருக்கும் அறையின் வாசலின் வெளியே வந்து நிற்கும். பின்னர் வீரர்கள் கதவை திறந்து, பின்-நம்பரை டைப் செய்த பின்பு, ரோபோ உணவை அவர்களிடம் அளித்துவிட்டு சென்றுவிடும்.அதைபோலவே அறையின் கூரையிலிருந்து உணவை டெலிவரி செய்யும் முறையும் பயன்பாட்டில் உள்ளது.
ஏறத்தாழ 2 மாதங்கள் நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் என இரண்டிற்கும் சேர்த்து இந்த ஒருங்கிணைந்த வளாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் விளையாட்டு மைதானத்திலிருந்து, அவர்கள் தங்கியிருக்கும் அறைகள் மற்றும் உணவகங்களுக்கு சென்று வர பிரத்யேகமாக தனி வாகன போக்குவரத்து  வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வளாகத்திலிருந்து வெளியே சென்று பொருட்களை வாங்கி கொண்டு வரும் வாகனங்கள் பயணிக்க சாலையில் தனி வழித்தடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் பிற வாகனங்கள் பயணிக்க அனுமதி இல்லை. ஒருவேளை ஒலிம்பிக் சார்ந்த வாகனங்கள் அந்த வழித்தடத்தில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டாலும் கூட பொதுமக்கள் அவர்கள் அருகே செல்ல வேண்டாம் என்று கடுமையான கொரோனா கால கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.