புதுடெல்லி: வரும் மார்ச் மாதம் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்த ஆண்டு தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்த நிலையில் இலங்கை மீனவர்களை போல தமிழக மீனவர்களும் குறைந்த பட்ச அளவில் பங்கேற்க அனுமதி வழங்கி தரக்கோரி மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடந்த 4ம் தேதி கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ‘இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர் பாலு, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று பேசினார். அப்போது கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து இலங்கை மீனவ பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசனை செய்து, தமிழக மீனவர்கள் கலந்து கொள்ளும் வகையில் சாதகமான முடிவு அறிவிக்கப்படும் என இலங்கை அமைச்சர் உறுதி அளித்ததாக, டி.ஆர் பாலு தெரிவித்தார்.