அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படியை அதிகரித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, 11வது ஊதியத் திருத்தக் குழு அளித்த பரிந்துரையின் படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
இதற்கு அம்மாநில
அரசு ஊழியர்கள்
எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், 11வது ஊதிய திருத்தக் குழுவின் பரிந்துரையின் அளித்த ஊதிய உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், பழைய முறைப்படி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது குறித்து மாநில அரசு கண்டு கொள்ளவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த ஆந்திர மாநில அரசு ஊழியர்கள், கடந்த 3 ஆம் தேதி விஜயவாடா நகரில் மாபெரும் பேரணி நடத்தினர். இதில் ஆயிரக் கணக்கான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி முதல் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, கடந்த 5 ஆம் தேதி, அமைச்சர் தலைமையில் அடங்கிய குழு, ஊதிய உயர்வு தொடர்பாக, அரசு ஊழியர்கள் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தை சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு, அரசு ஆலோசகர் (பொது விவகாரங்கள்) சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு ஊழியர்கள் சங்கத்தினரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு ஊழியர்களுக்கு
வீட்டு வாடகைப்படி உயர்வு
அளிக்க மாநில அரசு ஒப்புதல் தெரிவித்து உள்ளது.
அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் உள்ள அரசு ஊழியர்களுக்கு இனி 16 சதவீத வீட்டு வாடகைப்படி கிடைக்கும். மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஹைதராபாத்தில் இருந்து இடம் பெயர்ந்த மாநிலச் செயலகம் மற்றும் துறைத் தலைவர்கள் பணியாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 24 சதவீதம் வீட்டு வாடகைப்படி கிடைக்கும்.
இருப்பினும், இதுவரை அவர்கள் பெற்று வந்ததை விட இது 6 சதவீதம் குறைவாகும். திருத்தப்பட்ட வீட்டு வாடகைப் படி உயர்வு இந்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும். இதே போல், 70 – 74 வயதுக்கு உட்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும். 75 – 79 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 12 சதவீதம் ஓய்வூதியம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.