நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக இரண்டாவது நாளாக காணொலி மூலம் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அதில் உரையாற்றிய அவர், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 70 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் நழுவ விட்ட வெற்றியை உள்ளாட்சி தேர்தலில் மீட்க வேண்டும் என்றும் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற்றால் மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்கத் தவறியவர்கள் கூட, தற்போது வாக்களிக்கும் மனநிலைக்கு வந்து விட்டார்கள் என்றும் தி.மு.க. மீதான கடுமையான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் குறைந்துக்கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.