எழுத்தாளர் பிரியா தம்பி சில வருடங்களுக்கு முன் விகடனுக்கு எழுதிய தொடர் ‘பேசாத பேச்செல்லாம்’. அந்தத் தொடரில் எழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய ‘கனவெது நிஜமெது’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஓர் ஏழைத் தாயின் உள்ளாடை பிரச்னையை பற்றிய சிறுகதை குறித்து எழுதியிருந்தார் எழுத்தாளர் பிரியா தம்பி. படிக்கும்போதே என் மனதை கனக்க வைத்த சிறுகதை அது.
அந்தச் சிறுகதையை ’பேசாத பேச்செல்லாம்’ என்ற பெயரிலயே குறும்படமாக எடுத்துள்ளார் இளம் இயக்குனர் ஜெய் லட்சுமி. சினிமாவுக்காக தன்னுடைய பெயரை நிறைய பேர் ஜோதிடத்தைப் பார்த்து மாற்றிக் கொள்வார்கள். இவரும் தன் பெயரை மாற்றியுள்ளார். ஆனால், அது ஜோதிடத்தைப் பார்த்து வைத்த பெயர் அல்ல… அவரை பெற்றெடுத்து ஆளாக்கிய அம்மாவின் பெயர் அது! அவருடைய அம்மாவின் பெயர் ஜெய் லட்சுமி, அதை தன் பெயராக மாற்றிக் கொண்டிருக்கிறார் இவர்.
’நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்காக இவர் எடுத்த ’பேசாத பேச்செல்லாம்’ குறும்படத்தை யதேச்சையாக ஒரு நாள் யூடியூப்பில் பார்க்க நேர்ந்தது. குறும்படம் ஓடத் தொடங்குவதற்கு முன்னால்… நடிகர் நாசர், இயக்குனர் கோபி நயினார், இயக்குநர் பிரம்மா ஆகியோர் அந்தக் குறும்படத்தை வெகுவாகப் பாராட்டி இருந்தார்கள்.
செம்மலர் அன்னம் என்ற இளம்நடிகை அந்தக் குறும்படம் முழுக்க வருகிறார். தீரா நோயினால் படுக்கையில் விழுந்த கணவனை குணப்படுத்த துடிக்கும் கைக்குழந்தையுடன் அவதிப்படும் ஓர் ஏழைத் தாயின் கேரக்டர் அது. செம்மலர் அன்னம் அந்தக் கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தார். குழந்தைக்கு மருந்து வாங்க, கணவனுக்கு மருந்து வாங்கக்கூட இயலாத செம்மலர் தன்னிடம் இருக்கும் கிழிந்து போன ஒற்றைப் பாவாடையையே நாள்தோறும் அணிந்துகொண்டு, தான் பணியாற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைக்குச் செல்கிறார். அங்கு பணிபுரியும் மற்ற பெண்களோ செம்மலரின் உள்ளாடை குறித்து கலாய்த்து பேசி விமர்சிக்கிறார்கள். தோழியிடம் பாவாடையை கடன் கேட்கும் செம்மலர் வெறுங்கையுடன் வீடு திரும்புகிறார்.
இந்நிலையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் செம்மலர் வேலை செய்துகொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய கணவர் இறந்ததாக செய்தி வர பதற்றத்துடன் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு இருக்கும் ஒரு பெண்ணோ, எளவு சம்பிரதாய காரியத்துக்கு “சேலை பாவாடையெல்லாம் எடுத்துட்டு வரேன்னு சொன்னாங்க… நான்தான் பாவாடை எதுக்கு… சேலைய மட்டும் எடுத்துட்டு வாங்கன்னு சொன்னேன்…” என்று சொல்ல, துக்கம் தாங்காத செம்மலர் “ஐயோ” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார். அதோடு குறும்படம் முடிகிறது.
தமிழ் சினிமா உலகுக்குப் பெருமை சேர்த்த குறும்படம் இது என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். இயக்குநர் மடோன் அஸ்வினின் ’தர்மம்’ குறும்படத்துக்குப் பிறகு என் மனதை அதிகம் பாதித்த குறும்படம் இதுதான். இயக்குனர் சேரன், இயக்குனர் வெற்றிமாறன் போன்ற கலைஞர்களின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது இந்தக் குறும்படம்.