‘மரியாதை! மரியாதை!’ – இந்த வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்து விட்டால், வாழ்வின் பெரும்பாலான இக்கட்டுகளிலிருந்து மனித இனத்தை மட்டுமல்ல… எல்லா உயிரினங்களையுமே நாம் அமைதி பெறச் செய்து விடலாம். ஆனாலும் ‘நான்தான் உயர்ந்தவன் என்ற அகங்காரம்’ – அதாங்க ‘ஈகோ’, அதற்கு இடம் தருவதில்லை.
‘எல்லாவற்றிலும் நானே, எல்லாம் எனக்கே. பதவிக்கும் நானே, பரிசும் எனக்கே’ என்ற எண்ணத்தால்தானே இங்கு உயிரினங்கள் ஏகத்துக்கும் அல்லல்படுகின்றன. அதற்காக ஆசையே படக் கூடாதா என்கிறீர்களா?படலாம். அதில் நியாயம் வேண்டும். மரியாதை பெறுகின்ற அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடிக்கும் விதமாக நமது செய்கைகள் அமைய வேண்டும். அதற்காகத்தான் ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்’ என்றார்கள் (Give and Get Respect). ம்… இங்கு எல்லாமே கொடுக்கல், வாங்கல் பிசினஸ்தான், வணிகந்தான். வணிகத்தையும் நேர்மை தவறாமல் செய்த காலமெல்லாம் மலையேறிப் போனதுதான் வேதனை. எத்தனை ஆலயங்களில், முதல் மரியாதை பெற மோதிக் கொள்ளும் பலரைப் பார்க்கிறோம். ஆனாலும், ஆங்காங்கே சில அன்னலட்சுமிகளும், அகிலம் அமைதி பெற வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதே அடி மனத்துக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம். மரியாதை என்று ஆரம்பித்ததுமே, எந்தச் சினிமாவைப்பற்றிப் பேசப் போகிறோம் என்பதைக் கண்டு பிடித்துவிட்டீர்கள்தானே? ஆம்… ’முதல் மரியாதை’ படத்தைக் கொஞ்சம் நினைவு கூர்வோமே. 36 ஆண்டுகளைக் கடந்த (ரிலீஸ் 15 ஆகஸ்ட் 1985) அந்தப்படம், என்றுமே மரியாதைக்கு உரியதுதான்!
ஆற்றையொட்டிய அந்தக் கிராமத்தில், வாலிபக் கோளாறு காரணமாக வழி தவறிய பெண்ணை (பொன்னாத்தாள்-வடிவுக்கரசி) குடும்ப மானத்தைக் காக்கும் பொருட்டு மனைவியாக ஏற்கும் ஊர் நாட்டாமை(மலைச்சாமி-சிவாஜி), பஞ்சம் பிழைக்க ஊர்தேடி வரும் தன் மகள் வயதையொத்த பெண்ணிடம் (குயில்-ராதா) வாஞ்சை காட்ட, அந்தப் பெண்ணோ நாட்டாமையின் மீது மையல் கொள்ள, அவரின் மானம் காக்கக் கொலையும் செய்கிறாள். உறவுகளெல்லாம் ஒன்று திரண்டு எதிர்த்தபோதும் அலட்சியப்படுத்தி விட்டு அவளுக்கு வக்காலத்து வாங்கும் நாட்டாமை, அவள் சிறைக்குச் சென்றதும், அவள் வீட்டிலேயே தஞ்சமடைவதும், அங்கேயே உயிரை விடுவதும் படத்தை உயரத்துக்குக் கொண்டு செல்லும் ஏணிப்படிகள்.
ஒவ்வொரு கிராமத்திலும் மலைச்சாமி போன்ற மனிதர்கள் மௌனப் போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் கவலையை மறக்க, ஆடுவதும் பாடுவதுமாக தங்கள் அகப் போராட்டத்தை மறைக்க முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடே, சிவாஜியின் எசப் பாட்டு. தன் பாட்டுக்கு, எசப்பாட்டு பாடியது குயில்தான் என்று தெரிந்ததும் ஒரு நெருக்கம் ஏற்பட, அது ’நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ வளர, அவள் வீட்டில் மீன் சாப்பிடும் அளவுக்கு அது இறுக, சந்தையில் ஆடு விற்றுக் கொடுப்பதும், போட்டோ எடுத்துக் கொள்வதும் நிகழ, அது மெல்ல ஊர்க்காதுகளில் புகுந்து புகைச்சலை ஏற்படுத்துவது இயற்கைதானே. அதிலும் கயிறு திரிப்பவர்கள்(ஜனகராஜ்) உள்ள ஊரில், கதைகள் காற்றில் கலக்கத்தானே செய்யும். பஞ்சம் பிழைக்க வரும் வயசுப் பெண்கள், ஊர்ப் பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெற வேண்டித்தான் உள்ளது.
ஆழம் நிறைந்த கதை வேராக இருக்க, அதனைச் சொல்லிச் செல்லும் விதமே, பூமிக்கு மேல் பூத்துக்குலுங்கும் அழகுச் செடியாக அதனை ஆக்கி, அனைவர் மனத்திலும் இடம் பெறச் செய்யும். தன் இளமையைப் பரிசோதிக்க யாருமறியாமல் இளவட்டக் கல்லைத் தூக்கிப் பார்க்கும் கணேசன். ’உன் மனசு நோகக் கூடாது பாரு… அதுக்காகத்தான் இந்த மீனைச் சாப்பிடுகிறேன்’ என்று கூறியபடி சுவைத்து உறிஞ்சி, முள்ளை மட்டும் மீதம் வைக்கும் சிவாஜி. மழையின் தூய கூரை நீரில் கைகளைக் கழுவி விட்டு ராதா சாதம் போட, நடிகர் திலகத்தின் நினைவுகளில், மூக்கை ஒரு கையால் சிந்தியபடி சோற்றைத் தட்டில் போடும் வடிவுக்கரசி வந்து போவது, நல்ல ஒப்பீடு. ’நான் தவிடு விற்கப்போனால் காற்று அடிக்கிறது. உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது’ என்று சொல்லி ஏமாற்றும் மருமகன், கட்டை விரலை இழந்து நிற்பது அக்கிரமத்தின் உச்சகட்டம் என்றால், நிலாவைக் கையில் பிடித்து விளையாடிய அந்த இளசுகள் அநியாயமாக இறந்து போவது சோகத்தின் உச்சகட்டம். ’எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்ற வீராசாமியின் குரல் இன்றும் காதுகளில் ஒலிக்கிறது.
‘வெட்டிவேரு வாசம்
வெடபுள்ள நேசம்…
கையகட்டி நிக்க சொன்னா
காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா
பூமி இங்கு சுத்தாது…’
உண்மைதான்… வெடல புள்ள நேசந்தானே கதையின் கரு. ராதிகாவின் குரலும், ராதாவின் பருவமும் படத்தின் இரண்டு கண்கள் என்றால் அது மிகையில்லை.
‘ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க…
அடடா எனக்காக
அருமை கொறைஞ்சீக
தரும மகராசா
தலைய கவுந்தீக…
காதலின் வேகம் இதுதானே! புனிதமும் இப்படித்தானே! வெடலப் புள்ளையின் விவேகம் காதலில் தெரியாமல் போகாது என்பது மெய்தானே!
‘பூங்காற்று திரும்புமா
என்பாட்ட விரும்புமா…
தாலாட்ட எனக்கொரு
தாய்மடி கிடைக்குமா?
உள்ளே அழுகுறேன்
வெளியே சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான்
வெளுத்து வாங்குறேன்…
வெளுத்து வாங்க சிவாஜிக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும். மெத்தையை வாங்கி விரித்து விட்டு, தூக்கத்துக்காக அலையும் வேதனையை விளக்கும் ரோலை அனாயாசமாகச் செய்ய, அவரை விட்டால் வேறு யாருண்டு?அந்த நடை…சோகத்தை உள் வாங்கிக்கொண்டு, யாருக்கோ பிறந்த பெண்ணைத் தன் மகளாகவே இறுதி வரை பாவிப்பது…தன்னிடம் விளையாட்டாக எப்போதோ வாங்கிய வெள்ளிக் கம்பியை, அதாவது நரைத்த முடியை, ராதா பொக்கிஷமாகப் பாதுகாக்க, உண்மை அன்பின் உயிர்த்துடிப்பை விளக்குவதல்லவா!மரணப்படுக்கையில் குயில் வீட்டில் படுத்திருக்கையில், அவள் பரோலில் எந்திரப்படகில் வந்து ஆற்று மணலில் கால் பதித்ததும் அவர் உடம்பில் ஓர் உயிர்ப்பு வருமே…இயக்குனர் அங்கல்லவா நிற்கிறார். இப்படி இன்னும் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். நாயகனை இழந்த நாயகியின் உயிர், ஓடும் ரயிலிலேயே விடை பெற்றுக் கொள்ள… நாம் விம்மும் இதயத்துடன்தானே வெளியே வருகிறோம். தமிழ்த் திரையுலகில், இறப்பில் முடியும் அநேகப்படங்களே பெரும் வெற்றியடைந்திருக்கின்றன. சோக முடிவையே
நம் ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். அதுவே அவர்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அளவான சோகமும் ஒரு விதச் சுகமல்லவா?
1986-ம் ஆண்டிற்கான வட்டாரத் திரைப்படத்திற்கான தேசிய வெண்தாமரை விருதை முதல் மரியாதை படம் பெற்றது.
இந்தப்படத்தில் பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. மைசூருவில் நடைபெற்ற முதல் நாள் படப்பிடிப்புக்கு, நடிகர் திலகம், ‘திரிசூலம் ராஜசேகர்’ கெட்டப்பில் வர, பாரதி ராஜா அதிர்ச்சியாகி், தூரப்போய் சிகரெட் பிடிக்க ஆரம்பித்து விட்டாராம். தொடர்ந்து புகை பிடிக்க, படக்குழு திகைத்து நிற்க, காலை உணவுக்காக சிவாஜி அந்த கெட்டப்பைக் களைக்க, உடனே ஓடி வந்து ஷூட்டிங்கை ஆரம்பித்தாராம் பாரதி ராஜா. அதிக மேக்கப் இன்றி, ’விக்’ இன்றி இயல்பாக இருக்க வேண்டுமென்பதே இயக்குனரின் விருப்பமாம். ’மேக்கப் போகட்டும். வசனத்தில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று சிவாஜி இருக்க, வசனமும் அதிகம் இல்லையாம். வேண்டாவெறுப்பாக தன் வசனப் பகுதியை முடித்துக் கொடுத்தாராம் சிவாஜி.
படத்தைப் பார்த்த பஞ்சு அருணாச்சலமும், இசை ஞானியும் ‘படம் வேஸ்ட்’ என்று கமெண்ட் கொடுக்க, பாரதிராஜா ஆடிப்போய் விட்டாராம். ஆனால், உதவி ஒளிப்பதிவாளர் இளவரசுவும், விநியோகஸ்தர் வடுகநாதனும், சிவாஜியும்தான் நம்பிக்கை கொடுத்து உதவினார்களாம். படம் முழுமை பெற்று தியேட்டருக்கு வந்து சக்கைப் போடு போட்டது. பட்டி தொட்டிகளிலும் நன்கு ஓடி, பலதரப்பட்டோராலும் பாராட்டப்பட்டது. ’விக் இல்லை, மேக்கப் இல்லை’ என்று பயந்த சிவாஜி, ஒரே இன்னிங்க்சில் 10 விக்கட் எடுத்த பௌலராகப் பூரித்துப் போனாராம். இளவரசுவுக்கும் வடுகநாதனுக்கும் நன்றிக்கடனாக, தயாரிப்பாளர் அந்தஸ்தைக் கொடுத்து அழகு பார்த்தாராம் பாரதி ராஜா. சிவாஜி என்ற ஒப்பற்ற நடிகனும், பாரதி ராஜா என்ற மாபெரும் கலைஞனும் இணைந்த இந்தப்படம் நன்றாக ஓடியதில் வியப்பேதுமில்லை. ஒரு வேளை, மாறாக அது ஓடாது போயிருந்தால்தான் வியப்பை ஏற்படுத்தியிருக்கும். நம் கிராமங்களில்தான் எத்தனையெத்தனை புதிர்கள் புதைந்து கிடக்கின்றன. அவை அத்தனையையும் வெளிக் கொண்டு வருவது அவ்வளவு எளிதில்லை போலும்.
– ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி